எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட - “The Alchemist” நூலாய்வு நிகழ்ச்சியில் ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும் அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், இவ்வமைப்பின் ஒன்பதாவது நிகழ்வாக கடந்த 14/07/2016 வியாழனன்று மாலை 05:00 மணிக்கு நமதூரின் பிரதான சாலையில் அமைந்திருக்கும் துஃபைல் வணிக வளாக ஹனியா சிற்றரங்கில், The Alchemist என்ற ஆங்கில புனைவு நூலின் மீதான நூலாய்வும் (தமிழில், ரஸவாதி), அது தொடர்பான குறும்பட திரையிடல்களும் கருத்து பரிமாற்றங்களும் நடைபெற்றன.
இந்த நூலாய்வு நிகழ்ச்சி கீழ் வரும் பகுதிகளை உள்ளடக்கங்களாக கொண்டிருந்தது:
அ) நூல் அறிமுகம்
ஆ) நூலாசிரியர் அறிமுகம்
இ) The Alchemist கதை சுருக்கம்
ஈ) நூல் பேசிடும் தத்துவ போதனைகள்
உ) பார்வையாளர்களுடன் கருத்து பரிமாற்றம்
அ) நூல் அறிமுகம்
நூலைப்பற்றியும், நூலாசிரியர் பெளலோ கொய்lலோவைப்பற்றியும் ( http://paulocoelhoblog.com/ )) சிறு அறிமுக உரையை அஹ்மத் சாஹிப் ஆற்றினார்.
நூலின் முதல் பதிப்பு 1988-ஆம் ஆண்டு போர்த்துகீசிய மொழியில் வெளியானது. 2015-ஆம் ஆண்டின் இறுதியில், எண்பதிற்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, 65 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு நூலாசிரியரின் ஆயுட்காலத்திலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்ற கின்னஸ் உலக சாதனையையும் எட்டியுள்ளது. இந்நூல் அடைந்த பிரபலத்தினால், The Alchemist – Graphic Novel எனும் காமிக்ஸ் நாவலும் வெளியிடப்பட்டது.
Cornish Collective என்னும் நிறுவனம் தயாரித்த இந்நூலைத் தழுவிய திரையரங்க நாடகம் பெரும் வெற்றி அடைந்தது. 2009-ஆம் ஆண்டு இந்தியாவில் (மும்பை) முதன் முதலாக இந்நாடகம் அஸ்லின் கிட்வானி தயாரிப்பு நிறுவனத்தால் அரங்கேற்றப்பட்டது.
2008-ஆம் ஆண்டு, கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்நூல் கூறும் கதையை திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆ) நூலாசிரியர் அறிமுகம்
பிரேசில் நாட்டை சேர்ந்த பெளலோ கொய்லோ 1947-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் எழுதியுள்ள முப்பது புத்தகங்களில், மூன்று பத்தகங்கள் தன் வரலாறுகளாகும். மொத்தத்தில், இவரது புத்தகங்கள் 200 மில்லியன் படிகள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியரின் தன்வரலாறு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது [Não Pare na Pista (போர்த்துகீசியம்); The Pilgrim (ஆங்கிலத்தில்)].
இ) The Alchemist கதை சுருக்கம்
‘Animated Summary of The Alchemist’ எனும் குறும்படம் திரையிடப்பட்டு, நூலின் கதை சுருக்கத்தை அ.ர.ஹபீப் இப்றாஹீம் கூறினார்.
பாதிரியாராக ஆக வேண்டுமென்ற தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, உலகை சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற தன் சொந்த ஆசையை நிறைவு செய்ய நினைக்கும் ஒரு ஸ்பெயின் நாட்டு சிறுவனின் கதை தான் இந்த The Alchemist.
படித்து விட்டு ஆடு மேய்ப்பவனாக மாறி, தனது ஆடுகளுடன் அந்நாட்டின் அந்தலூசியா பகுதியிலுள்ள கிராமங்களையும் சிற்றூர்களையும் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த சாண்டியாகோ எனும் இச்சிறுவன், தான் கண்ட கனவை மெய்ப்பிக்க எகிப்து நாட்டின் பிரமிடுகளை காண செல்லும் பயணம், அது தரும் பாடங்கள், பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் பட்டறிவுகள் போன்றவற்றை அழகாக கூறியிருக்கும் இக்கதை வெறும் கற்பனையானதாக மட்டுமில்லாமல், வாழ்கையின் நோக்கத்தை உணரக்கூடிய தத்துவமாகவும் அமைவது சிறப்பு.
மேலும் விவரங்களுக்கு, பார்க்க:
(1) The Alchemist நூலின் இலவச PDF பதிப்பை பதிவிரக்கம் செய்ய, http://www.shipk12.org/wp-content/uploads/2013/08/Paulo_Coelho_-_The_Alchemist.pdf
(2) Animated Summary of The Alchemist குறும்படம் காண https://www.youtube.com/watch?v=_JQGpQsDzdQ
ஈ) நூல் பேசிடும் தத்துவ போதனைகள்
‘Six lessons from The Alchemist’ எனும் குறும்படம் திரையிடப்பட்டு, நூலின் கருப்பொருள் குறித்தும் அது பேசிடும் தத்துவ போதனைகள் குறித்தும் சாளை பஷீர், ஹபீப் இப்றாஹீம் மற்றும் அஹ்மத் ஸாஹிப் ஆகியோர் விளக்கினர்.
இந்நூலில், பக்கத்திற்கு பக்கம் அழகிய வாக்கியங்களைக் கொண்ட தத்துவ கருத்துக்கள் மிகுதியாக இருப்பது நூலாசிரியரின் எழுத்தாளுமைக்கு சான்றாக விளங்குகிறது. கதையில் வரும் அனைத்து மாந்தர்களும், ஆடுகளும் மற்றும் பேரண்ட ஆற்றலும் அச்சிறுவனுக்கு வாழ்க்கை பாடத்தை புகட்டிக்கொண்டே இருப்பது மற்றுமோர் சான்றாகும்.
சிறுவன் தனது இதயத்துடன் உரையாடுவதும், ஆடுகளுக்கு புத்தகம் வாசிப்பதும் வாழ்க்கையை ரசித்து வாழ்வது எப்படி என்பதை நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
சிறு சிறு விஷயங்களுக்கும் பொருள் வரையறை கொடுத்து எளிதில் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார் ஆசிரியர். உதாரணங்களாக, Personal Legend / Calling, The Soul of the Universe, Language of the World, Language of the God, World’s Greatest Lie, Mission on Earth, All things are One மற்றும் Beginner’s Luck / Principle of Favorability ஆகியவைகளை குறிப்பிடலாம்.
மேலும் விவரங்களுக்கு, பார்க்க:
(1) Six lessons from The Alchemist குறும்படம் காண https://www.youtube.com/watch?v=b41MXNaFJj0
உ) பார்வையாளர்களுடன் கருத்து பரிமாற்றம்
தொடர்ந்து பார்வையாளர்களுடன் இது குறித்து கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் சுருக்க தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1) ஏன் இந்த நூல்?
எத்தனையோ நூல்கள் இருக்க இதை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
ஜென், பௌத்த, ஹிந்து ஞான மரபுகள் பல வகையான இலக்கிய வடிவத்தில் நமக்கு வாசிக்க ரசிக்க கிடைக்கின்றன. ஆனால், இஸ்லாமிய தத்துவம், மெய்யியல் போன்றவற்றை பொது மொழியில் விளக்கும் நூல்கள், இலக்கிய வடிவங்கள் தமிழில் மிக மிகக் குறைவு அல்லது அறவே இல்லை என சொல்லி விடலாம். இஸ்லாமிய தத்துவம், மெய்யியல் தொடர்பாக முஸ்லிம்களிடம் இருக்கும் இலக்கிய வடிவங்கள் அனைத்தும் முஸ்லிம்களை நோக்கி மட்டுமே பேசக்கூடியவையாக இருக்கின்றன.
இஸ்லாம் ஒரு முழு பிரபஞ்ச நெறி எனும்போது அதுதொடர்பான அறிமுகமும் பயிற்சிகளும் மனிதர்கள் அனைவருக்கும் புரிகின்ற ஒரு பொது மொழியில் இருக்க வேண்டும். The ALCHEMIST என்ற இந்த நூல் கத்தோலிக்க இஸ்லாமிய மெய்யியல்களின் அழகிய பிணைவு ஆகும். மிக எளிய நடைக்குள் ஆழமான தத்துவ விஷயங்களை இணைத்துச் சொல்வதின் வழியாக, கனமும் எளிமையும் இந்த நாவல் முழுவதும் இயங்கிக் கொண்டே உள்ளது.
இது போன்ற புனைவுகள், இலக்கிய படிகளை உண்டாக்குவதில் தமிழக முஸ்லிம்களிடயே உள்ள கெட்டி தட்டிய போக்கை தகர்ப்பதுவும் இந்த நூலாய்வின் பல நோக்கங்களில் ஒன்றாகும்.
2) எதற்கு இந்த தலைப்பு?
நூலாசிரியர் இந்த நூலுக்கான தலைப்பை ரஸவாதி என பொருள்படும் The Alchemist என்ற தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கான விடையை சிந்திக்கும்போது, ரஸவாதத்தின் (Alchemy) கோட்பாடுகளை ஆன்மீக முழுமையை அடைவதற்கான வழியோடு ஒப்பிடுவதற்கே என்பது தெளிவாகிறது.
ஒரு ரஸவாதி ஈயத்தின் அழுக்குகளை நீக்கி அதனை தங்கமாக மாற்றுவது போல, ஒரு மனிதன் பிற இடையூறுகளை புறம் தள்ளி தனது தனிப்பட்ட நோக்கத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தினால், தான் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றி ஆன்மீக நிறைவை அடையலாம்
3) நூல் பேசிடும் தத்துவ போதனைகள் குறித்த விவாதம்
மேல் கூறியது போல், மனித வாழ்விற்கு அழகிய மனதுக்கிசைந்த பொருள் கற்பிக்கும் ஏராளமான தத்துவ வரிகள் இதில் உள்ளன. அவை அனைத்தையும் பேசுவதற்கு நேரமின்மை ஒரு பெருந்தடையாக இருந்தது. விவாதிக்கப்பட்ட போதனைகளில் சிலவற்றை கீழே காணலாம்:
உங்கள் வாழ்க்கை தொடர்பாக கனவுகளை காணுங்கள். உங்கள் இதயத்தின், ஆன்மாவின் மொழியை உன்னிப்பாக கேளுங்கள்.
அற்ப சொற்ப விஷயங்களுக்கான நாட்ட தேட்டம் என்பது இந்த கனவு வகையில் சேராது. அது வெறும் இச்சை, சபலம் என்ற அளவில் மட்டுமே சுருங்கக் கூடியது. ஆனால், வாழ்க்கை பற்றிய கனவு என்பது மொத்த வாழ்க்கையும் மனதுக்கிசைந்த பாதையின் வழியாக நகர்ந்து ஒரு மகத்தான இலக்கில் போய் நிறைவது பற்றியதுதான்.
இத்தகைய கனவு ஒன்றே நமது அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்தும் மீட்க உதவும் என்பதற்கு இந்த The Alchemist புனைவில் வரும் படிக கடைக்காரரும் இடைச்சிறுவனும் சாட்சி.
நாம் காணும் கனவின் வழியில் நடைபோடும்போது இந்த பேரண்ட ஆற்றல் முழுவதுவும் உங்களுக்கு உதவுகின்றது. நூலின் இந்த வரிகள் நமதூரில் ஒரு ஆளின் வாழ்வின் மெய்ப்படுவதை நேரடியாக காண முடிந்திருக்கின்றது. அந்த ஆள் எப்போதும் நான் நிறைய சம்பாதிக்க வேண்டும் நிறைய கொடுக்க வேண்டும் என அடிக்கடி சொல்வார். பின்னாட்களில் அவரது வாழ்வில் அது போலவே நடந்தது.
நமக்கு விருப்பமானதை கைவிட்டு விட்டு நம்மீது திணிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டு வாழ்வதும் ஒரு எதிர்மறையான விஷயம்தான். எல்லோரும் போகும் மொத்த பாதையிலிருந்து முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொண்டு தான் விரும்பிய ஒரு பாதையில் நடை போட்டுக் கொண்டிருப்பவருக்கு நமதூரிலேயே எடுத்துக்காட்டாக ஒரு மனிதரைச் சொல்ல முடியும்.
அவர்தான் செம்பருத்தியுடன் உணவுப்பயிர்களை பயிரிடும் 48 இப்றாஹீம் என்ற நமதூரின் முதல் விவசாயியாவார். அவரைப்பார்க்கும்போது மனதில் ஒரு நம் மீதே நமக்கு குற்ற உணர்ச்சிதான் ஏற்படுகின்றது.
அது போல “ இக்கணத்தில் வாழ் “ என்ற வரிகளும் அன்றைய தினத்திற்கான.உணவு , உடல் , மன ஆரோக்கியம் உள்ளிட்ட சில எளிய வாழ்க்கை வசதிகளைப் பெற்றவர்தான் செல்வந்தர் என்ற வாழ்க்கை பற்றிய இயற்கை வரைவிலக்கணத்தோடு ஒத்துப் போகின்றது.
நேற்று என்பது முடிந்து போன சங்கதி. நாளை என்பதுவும் நமது கையில் இல்லை. இந்த நாள் இந்தக்கணம் என்பது மட்டுமே மெய். ஜென் பௌத்த தத்துவங்களும் அதைத்தான் சொல்கின்றன.
புதையலையும் கருவூலங்களையும் வெளியில் தேடி அலையாதீர்கள். அது உங்களுக்குள் உங்கள் இதயத்திற்குள்தான் இருக்கின்றது. இதை நமதூரின் மொழியில் சொல்வதாக இருந்தால் “இருப்பதை வைத்துக்கொண்டு பறப்பதற்கு ஆசைப்பட்டதைப்போல“ என்பதுதான்.
அதுபோலவே, நாம் நமக்கான வாழ்வாதாரத்தைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து திரிகின்றோம். ஆனால் நமது சொந்த ஊரிலேயே ஏராளமான வருமான வாய்ப்புகள் இருக்கின்றன. கண் முன்னாலேயே ஏராளமான சான்றுகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
“பாலைவனத்தை புரிந்து கொள்ள அதன் மணற்பரப்பிலிருந்து சிறு மணல் துகளை எடுத்து பார்த்தால் போதும்! மொத்த படைப்பின் அற்புதத்தையும் அறிந்து கொள்ளலாம்,” என்ற மேற்கோளின் வழியாக மொத்த உலகையும் ரசிப்பதற்கு பெரும் முயற்சிகள் எதையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை என படைப்பாற்றலின் அற்புதத்தை புரிந்து கொள்ளும் வழிமுறைகளை எளிதாக்குகின்றார் நூலாசிரியர்.
மிக எளிய சங்கதிகளுக்குள் ஒளிந்திருக்கும் புதைந்திருக்கும் அழகியலை புரிந்து கொள்ள உதவும் எளிய சூத்திரம் இது.
ஈயத்தை தங்கமாக மாற்றுபவன் மட்டுமில்லை ரஸவாதி. இறை வழியில் துருள்களிலிருந்தும் கறைகளிருந்தும் தனத ஆன்மாவை புடம் போடும் ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ரஸவாதியே..
`````````````````````````````````````````````````````````````````````````````````
நிகழ்ச்சியை சாளை பஷீர் ஒருங்கிணைத்தார். இறுதியில் நன்றி நவிலல், கஃப்ஃபாராவுடன் எழுத்து மேடை மையம் தமிழ் நாடு நடத்திய நூலாய்வு நிகழ்ச்சி மாலை 06:15 மணியளவில் நிறைவு பெற்றது.
--------------------------------------------------------------------------------------------
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & படங்கள்:
சாளை பஷீர் & அ.ர. ஹபீப் இப்றாஹீம்
எழுத்து மேடை மையத்தின் முந்தைய திரையிடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எழுத்து மேடை மையம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |