சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக 2 லட்சத்து 84 ஆயிரத்து 800 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 55-வது செயற்குழு கூட்டம் கடந்த 12.08.2016 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் ரியாத்-மலஸ்சில் அமைந்துள்ள லீ-ராயல் ஹோட்டலில் மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் தாவூத் இத்ரீஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் இப்ராஹீம் பைசல் வாசித்த பின் பார்வையாளராக கலந்து கொண்ட எம் மன்றத்தின் பொது குழு உறுப்பினர் சகோதரர் M.M.L.செய்து முஹம்மது அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, தொடர்ச்சியாக இக்கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று நடத்திய மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் தாவூத் இத்ரீஸ் அவர்கள் வரவேற்று, எம் மன்றத்தின் செயல்பாடுகளை பற்றி விவரித்தார். நம்மன்றம் ஒவ்வொரு செயற்குழு கூட்டத்திலும் மிக அருமையாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்போடு நடந்ததை சுட்டிக்காட்டி இக்கூட்டத்திலும் அதே பங்களிப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்தார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
ஷிபா/இக்ரா அமைப்புகள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து மொத்தமாக ரூபாய் 2,84,800 வழங்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:
கடந்த இரண்டாண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு ரூ. 1,700/- மதிப்பிலான அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது, இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு (2016) ரமலான் மாதத்தில் எமது மன்றத்தின் சார்பில் 178 ஏழைக் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இவர்கள் அனைவருக்கும் நாட்டுக்கோழி ஒன்றும் வழங்கப்பட்டது.
இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட ரியாத் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மது, ஒத்துழைப்பு நல்கிய சோனா ஷாஹுல் ஹமீது மற்றும் R.M.S.ஷாஹுல் ஹமீது ஆகியோருக்கும், இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த ரியாத் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில்; பணிகளில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் அலாவுதீன், சகோதரர் முஹம்மது இஸ்மாயில் மற்றும் சகோதரர் M.M.L.செய்து முஹம்மது ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.
குறிப்பாக, சகோதரர் அலாவுதீன் அவர்கள் கூறுகையில் தான் இதற்க்கு முன்னர் பல அமைப்புகள்/நல மன்றங்களின் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும், இருப்பினும், ரியாத் காயல் நலமன்றம் (RKWA)-வின் சீரிய செயல் பாடுகள் மற்றும் போட்டி போட்டு கொண்டு உதவி செய்யும் மனப்பான்மையுடைய உறப்பினர்களை கொண்ட இம்மன்றத்தின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாககும், நமதூருக்கு தேவையான காரியங்களை செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நற்செயலுக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் வழங்குவனாக என்ற பிரார்த்தனையோடு அமர்ந்தார்.
இறுதியாக சகோதரர் S.L.சதக்கத்துல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில M.M.L.செய்து முஹம்மது அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|