நகராட்சி, பேரூராட்சி ேபான்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் தலைவர் பதவிக்கு இனி நேரடி தேர்தல் கிடையாது. அவற்றிலும் மாநகராட்சி மேயரைப் போல் கவுன்சிலர்களே தலைவரை தேர்வு செய்வார்கள். இதற்கான புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு, இது வரை மக்களால் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் வகையில் நேரடி தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்து, கவுன்சிலர்களால் தேர்வு செய்யும் வகையில் புதிய சட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்தது.
இதைத் தொடர்ந்து, தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் அதே போல் நேரடி தேர்தலை ரத்து செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:தற்போது, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்களுக்கு தேர்தல், கட்சி அடிப்படையில் நடத்தப்படுகின்றன. தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சில சூழ்நிலைகளில் தலைவர், மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் மன்ற உறுப்பினர்கள், தலைவரின் ஒத்துழைப்பையும் பெற முடிவதில்லை என்றும், அதன் மூலமாக தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பணிகளை செய்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும், மன்றங்களின் நடவடிக்கைகளில் கருத்து ஒற்றுமை ஏற்படுவதற்கும் தடைகள் இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.
மாநகராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கிடையே இருந்து ஒருவரை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே சீரான தேர்தல் நடைமுறைகளை கொண்டிருக்கும் ெபாருட்டு, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களையும் மன்ற உறுப்பினர்களால் அல்லது அவர்களுக்குள்ளே இருந்து நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் தலைவரை கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள்.
தகவல்:
தமிழ் முரசு |