ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் உள்ளூர் அமைப்பான காயல் - துபை நல மன்றத்தின் சார்பில், ஏழை - எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
2016 ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை கடந்த 4 மாதங்களில், 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவு மதிப்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏழை - எளிய மக்களுக்கு வணிகம் செய்யத் தேவையான மைக்ரோ ஓவன், தையல் மிஷின், கஞ்சி தயாரிப்பதற்கான பாத்திரங்கள் & சாதனங்கள், சாலையோரங்களில் வணிகம் செய்வதற்கு தள்ளுவண்டி, மீன் வணிகம் செய்ய - துணி வணிகம் செய்ய முதலீடுகள், உழைக்கவியலாத - தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைகள் உள்ளிட்ட உதவிகள் இதில் அடக்கம்.
காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியில், காயல் - துபை நல மன்றத்தின் தலைவர் லேண்ட்மார்க் ராவண்ணா அபுல்ஹஸன் இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், அவரது தலைமையில் - துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வழிகாட்டலில் இந்த உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
துபை காயல் நல மன்றத்தின் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், பிரதிநிதி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் ஆகியோரும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிப் பொருட்களை இணைந்து வழங்கினர்.
|