MEGA நடத்திய “பொதுவாழ்வில் நேர்மை” மக்கள் சந்திப்பு & பாராட்டு விழாவில், தம் பொறுப்புக் காலத்தில் நேர்மையுடன் செயல்பட்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் பாராட்டப்பட்டுள்ளனர். திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விரிவான விபரம் வருமாறு:-
பாராட்டு விழா:
காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (Mass Empowerment & Guidance Association - MEGA) சார்பில், “பொதுவாழ்வில் நேர்மை” எனும் தலைப்பில், மக்கள் சந்திப்பு & பாராட்டு விழா நிகழ்ச்சிகள், 24.10.2016. திங்கட்கிழமையன்று 19.00 மணிக்கு, தைக்கா தெரு - மகுதூம் தெரு சந்திப்பு காம்பவுண்டில் நடைபெற்றது. MEGA நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களான நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன், எஸ்.ஏ.முஹ்யித்தீன் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
நிகழ்முறை:
எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் ஜுனைதுல் பஃக்தாதீ ஸதகீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பெண்கள் பகுதியிலிருந்து தஸ்லீமா அஜீஸ் வரவேற்புரையாற்றினார்.
அறிமுகவுரை:
MEGA துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் - MEGA குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் அறிமுகவுரையாற்றினார்.
MEGA அமைப்பின் துவக்கம், 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலின்போதான அதன் செயல்பாடுகள், MEGA பெயர் மாற்றம், அதன் பிறகு நடைபெற்ற அதன் நகர்நல நடவடிக்கைகள் குறித்து துவக்கமாக அவர் விளக்கிப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-
இந்தப் பாராட்டு விழா ஏன் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும். கடந்த 2011ஆம் ஆண்டு நமது காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு ஒரு தலைவர், 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள், தம் ஐந்தாண்டு கால பொறுப்புக் காலம் முழுவதும் அநீதிக்கெதிராகவும், நீதியை நிலைநாட்டவும் துணிச்சலுடன் இறுதி வரை செயல்பட்டவர்களாக MEGA அமைப்பால் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அதன் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்தி, ‘மெகா’ சார்பில் விருது வழங்கப்படுகிறது.
தமது 5 ஆண்டுகால நகர்மன்றப் பொறுப்புகளில் இவ்விருவரும் சந்தித்த இன்னல்கள், வளைந்து கொடுக்காத இவர்களின் செயல்பாடுகளால் இழந்த இழப்புகள் ஏராளம். தம் குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்க இயலாமல், உற்றார் - உறவினர்களோடு கலந்துறவாட வாய்ப்பில்லாமல், நல்ல - துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாமல் அவர்கள் சந்தித்த சோதனைகள்...
இவையனைத்தையும் தாண்டி, இவர்களின் அநீதிக்கெதிரான நடவடிக்கைகளைச் சகித்துக்கொள்ள இயலாநிலையிலிருந்த சக நகர்மன்ற உறுப்பினர்களால் - “பெரும்பான்மை” என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி நகர்நலப் பணிகளுக்கு ஒத்துழைப்பளிக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்தது... பல நேரங்களில் இழிசொற்களால் அவர்களை அர்ச்சித்தது... எதிர்பாராத சிக்கல்களில் சிக்க வைத்து, காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு இவர்களை உட்படுத்த எடுத்த முயற்சிகள் என அனைத்தையும் நேர்மைக்குத் துணை நிற்கும் அல்லாஹ் தவிடுபொடியாக்கினான்.
இவ்விருவரும், தம் பொறுப்புக் காலத்தில் இழந்த இழப்புகளுக்கு ஈடாகப் பன்மடங்கு மகிழ்ச்சியை இறைவன் நிறைவாக வழங்கியருள்வானாக... அவர்களது தியாகங்களை அவன் ஏற்று, ஈருலக நற்பேறுகளை ஈந்தருள்வானாக...
“பொதுவாழ்வில் நேர்மை”க்கான சேர்மன் ஆபிதா விருது:
நேர்மைக்கு இலக்கணமாக நடந்து காட்டிய நகர்மன்றத் தலைவரைக் கண்ணியப்படுத்தும் வகையிலும், நேர்மையின்பால் அனைவருக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், “பொதுவாழ்வில் நேர்மைக்கான சேர்மன் ஆபிதா விருது”, ‘மெகா’வின் மூலம் இவ்விழாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இனி வருங்காலங்களில், தமிழக அளவில் - அநீதிக்கெதிராக நேர்மையுடன் செயல்படுவோர் ஆண்டுதோறும் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது என்ற நல்ல செய்தியை உங்களுக்கு அறிவித்து மகிழ்கிறோம்...
இவ்வாறு அவர் பேசினார்.
விருதளிப்பு:
தமது 5 ஆண்டு கால நகர்மன்றப் பொறுப்பில் நேர்மையுடன் செயல்பட்ட இருவருக்கு, “பொதுவாழ்வில் நேர்மை - Integrity in Public Life” விருது வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்குக்கு எஸ்.ஏ.முஹ்யித்தீனும், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனுக்கு, நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீனும் விருதுகளை வழங்கினர்.
பொதுமக்கள் சார்பில் பரிசுகள்:
லஞ்ச - ஊழலை வெறுக்கும் பொதுமக்கள் சார்பாக - நகர்மன்றத் தலைவருக்கும், 13ஆவது வார்டு உறுப்பினருக்கும் பல்வேறு குடும்பங்களின் சார்பில் பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விடைபெறும் நகர்மன்றத் தலைவரைப் பாராட்டி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், அதன் துணைத்தலைவர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன் சால்வை அளித்தார்.
MEGAவின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவரான - பஹ்ரைன் நாட்டிலிருக்கும் ‘கவிமகன்’ காதர் சார்பாக, MEGA பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், நகர்மன்றத் தலைவருக்கும் - 13ஆவது வார்டு உறுப்பினருக்கும் சால்வையளித்தார்.
வாழ்த்துரை:
விருது பெற்ற நகர்மன்றத் தலைவரைப் பாராட்டி, பெண்கள் பகுதியிலிருந்து நஜ்முன் நிஸா பிஸ்தாமீ, 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைப் பாராட்டி, நகரப் பிரமுகர் எஸ்.ஏ.முஹ்யித்தீன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
நகர்மன்ற உறுப்பினர் ஏற்புரை:
பின்னர் ஏற்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்கமாக, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஏற்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
மறக்க முடியாத நாள்...
என் வாழ்நாளில் இன்று மறக்க முடியாத நாள்... என் கண்கள் கலங்குகின்றன... இந்த 5 ஆண்டு காலத்தில் நாங்கள் அனுபவித்த சோதனைகளின் காரணமாக எனக்குப் பெரும் ஏமாற்றமும், விரக்தியும் இருந்த நிலையில், இன்று இந்த நிகழ்ச்சி அவற்றையெல்லாம் மறக்கடித்துவிட்டது.
எல்லோரையும் போல எங்களாலும் இருந்திருக்க முடியும். ஆனால் அதற்கு மனம் வரவில்லை. காரணம், இந்த உலகில் யாரையும் நாங்கள் ஏமாற்றி விட முடியும். ஆனால், மறுமையில் - படைத்த இறைவனின் கேள்விகளுக்கு எவ்வாறு விடை சொல்வோம்...? அங்கு எங்களுக்கு யார் துணை நிற்பார்கள்...? அந்த அச்சம்தான் எங்களை - எவ்வளவு இழிவு ஏற்படுத்தப்பட்டாலும் பரவாயில்லை... இறுதி வரை நேர்மை தவறாமல் செயல்படுவோம் என்று உறுதிகொள்ளச் செய்தது.
எங்களுக்கு இந்த விருதை வழங்கிய ‘மெகா’ அமைப்பினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
இவ்வாறு அவர் பேசினார்.
நகர்மன்றத் தலைவர் ஏற்புரை:
அவரைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஏற்புரையாற்றியதோடு, பொதுமக்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவான விளக்கம் வழங்கினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரான பின், மக்கள் நலனுக்காக தான் கண்ட கனவுகள், முன்வைத்த செயல்திட்டங்கள், சக உறுப்பினர்களிடமிருந்தும் – பொதுமக்களிடமிருந்தும் எதிர்பார்த்த ஒத்துழைப்புகள், அவற்றில் கிடைத்த சில - பல ஏமாற்றங்கள், இத்தனையையும் தாண்டி இந்நகருக்காக ஆற்றிய பணிகள் என அனைத்தையும், உரிய சான்றாவணங்களுடன் விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, பங்கேற்ற பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கும், முன்வைத்த விமர்சனங்களுக்கும் விரிவான விளக்கமளித்துப் பேசினார். நிறைவில்,
உங்களுள் ஒருத்தியாக...
“இது எனது நகர்மன்றத் தலைவர் பொறுப்பின் இறுதி நாள்... உங்கள் அனைவரிடமிருந்தும் நான் விடைபெற்றுக்கொள்கிறேன்... இனியும், ஒரு தலைவியாக இல்லாமல் - உங்களுள் ஒருத்தியாக உங்களோடு நான் இருந்து, என்னாலான ஒத்துழைப்புகளை நிறைவாகத் தருவேன்...
எங்கும் விளக்கமளிக்க தயார்!
இப்போது நடக்கும் இதே போன்ற ஏற்பாட்டை எந்த ஜமாஅத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்து என்னிடம் கேள்வி கேட்டாலும் உரிய விளக்கத்தை வழங்க ஆயத்தமாக உள்ளேன்... அனைவரையும் அழைத்து, இப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் விளக்கமளித்தது போல, நகர்மன்ற உறுப்பினர்களும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, விளக்கமளிக்க ஆயத்தம் என்றால், அங்கும் கேள்வி கேட்க நான் ஆயத்தமாக உள்ளேன்...
‘மெகா’வுக்கு நன்றி...
என்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தி முதல் நிகழ்ச்சியை இதே ‘மெகா’ அமைப்புதான் நடத்தியது. துவக்க நிகழ்ச்சியை நடத்தியவர்களே இன்று என் பொறுப்புக் காலத்தின் நிறைவு நிகழ்ச்சியையும் நடத்தி முடித்துள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
திறந்த புத்தகமாக...
எனது சின்னம் - திறந்த “புத்தகம்”. இந்த 5 ஆண்டு காலத்தில் எவ்வித ஒளிவு மறைவுமின்றி திறந்த புத்தகமாகவே என் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டேன்.
எத்தனையோ ஏழை மக்கள், “எங்க பிரச்சினைகளை இனி நாங்க யார்கிட்ட போய் சொல்வோம்...?” என்று கேட்டு, மறைவில் துஆ செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நன்றி.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்து, உங்கள் முன் “கரை படியாத கரங்களுக்கு” சொந்தக் காரியாக என்னை இயக்கிய இறைவனுக்கே எல்லாப்புகழும்!
தலைநிமிர்ந்து நுழைந்தேன்! தலைநிமிர்ந்தே விடைபெறுகிறேன்!!
ஒன்றே ஒன்று யாஅல்லாஹ்! எந்த ஆதிக்க சக்திக்கும் அல்லாஹ் என்னை அடிபணிய வைக்கவில்லை... கடைசி வரை அவன் என்னை அடிபணிய வைக்கவில்லை... எந்த சூழ்ச்சிக்கும் என்னைப் பணிய வைக்கவில்லை... எல்லா சூழ்ச்சிகளையும், சிரமங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையைத்தான் அவன் எனக்குத் தந்தான்... அந்த ரப்புக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்...
எப்படி நான் தலைநிமிர்ந்து இந்நகராட்சிக்குள் அடியெடுத்து வைத்தேனோ, அதே போல தலை நிமிர்ந்த நிலையிலேயே இந்நகராட்சியிலிருந்து விடைபெறுகிறேன்...
இவ்வாறு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றினார். MEGA செயலாளர் எம்.ஏ.புகாரீ (48) நன்றி கூற, துஆ - ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பங்கேற்றோர்:
இவ்விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆண்களுக்கும், மகளிருக்கும் தனித்தனியே இடவசதி செய்யப்பட்டிருந்தது.
ஏற்பாடு:
விழா ஏற்பாடுகளை, MEGA ஒருங்கிணைப்பாளர் சாளை நவாஸ் தலைமையில், அதன் நிர்வாகிகளும் - அங்கத்தினருமான எஸ்.ஏ.நூஹ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.எம்.முஜாஹித் அலீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, எஸ்.அப்துல் வாஹித், பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், கே.ஏ.முஹம்மத் நூஹ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், அஹ்மத் சுலைமான், ஜஃபருல்லாஹ், சாளை முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ, ஸித்தீக் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
அசைபடப் பதிவு வெளியீடு:
காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (Mass Empowerment & Guidance Association - MEGA) சார்பில் நடத்தப்பட்ட - “பொதுவாழ்வில் நேர்மை” மக்கள் சந்திப்பு & பாராட்டு விழா நிகழ்ச்சியின் முழு அசைபடப் பதிவை, கீழ்க்காணும் படத்தில் சொடுக்கிக் காணலாம்:-
https://www.youtube.com/watch?v=6FhWPpGSdTE&list=PLH8T2KEDbURt45ErElXa9phQ_dimw4R6b
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் – MEGA)
அசைபடம்:
வீனஸ் ஸ்டூடியோ
|