காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் நடத்திய “விடியலை நோக்கி” கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சியில், மாணவர்கள் - பெற்றோர் பங்கேற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு மாணவர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அதன் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-
நவீனங்கள் மிகைத்து விட்ட இக்காலத்தில், கல்வியின்றி- அதுவும் உயர் கல்வியின்றி முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. அம்முன்னேற்றத்தை அடையச் செய்திடும் உயர்கல்வி எது என சரிவர தெரியாமலேயே- எதிர்காலத்தைப் பற்றிய சரியான திட்டமிடல் இல்லாமலேயே மாணவர்கள் பலர், கல்லூரியில் ஏதோ ஒரு படிப்பில் சேர்ந்து விடுகின்றனர். இதனால், முன்னேற்றம் எதிர்பார்த்த அளவில் அமையாமலோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போய் விடுகிறது.
இவை ஒருபுறமிருக்க ,மத்திய - மாநில அரசுகளின் நிர்வாகப் படிப்புகள் (IAS, IPS, IRS) மற்றும் இதர வேலைவாய்ப்புகளுக்கான படிப்புகள் (TNPSC) பற்றிய சிந்தனையின்றியும், இது குறித்த விபரங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் அறியாமலும் நமது மக்கள் இருந்து வருகின்றனர்.
இக்குறையைக் களைந்திட, பெரு நகரங்களில் தேவையான வழிகாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்ற கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை காயல்பட்டினத்திலும் நடத்தி, இந்நகர மாணவ சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், எஸ்.- ஐ.ஏ.எஸ் அகாடமி - சென்னை ஒருங்கிணைப்பில், தம்மாம் , ரியாத் காயல் நல மன்றங்களும் இணைந்து , காயல்பட்டினம் நகர பள்ளிகளின் 10, 11, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்காக “விடியலை நோக்கி...” எனும் தலைப்பில் உயர் கல்வி மற்று ம் அரசு வேலைவாய்ப்புகள் குறித்த வழிகாட்டு நிகழ்ச்சியை, 04.09.2016 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 11.00 மணியளவில் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) மைதானத்தில் நடத்தின.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர்களான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுதீன், ஹாஜி குளம் எம்.ஏ.அஹமது முஹியித்தீன், செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், பேராசிரியர் கே.எம்.எஸ்.ஸதக் தம்பி, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால், டாக்டர் ஏ.முஹம்மது இத்ரீஸ் மற்றும் ஹாஜி எம்.ஏ.செய்யது முஹம்மது அலி, ஹாஜி எஸ்.ஐ.ஷாஃபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் டி .ஏ.இபுறாஹிம் ஃ பஹீமுல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய, இக்ராஃவின் தோற்றத்திற்கு காரணமானவர்களில் ஒருவரும், அதன் செயற்குழு உறுப்பினரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் MLA நிகழ்ச்சி குறித்த அறிமுகவுரையாற்றினார்.
இக்ராஃ கல்விச் சங்கம் துவங்கப்பட்ட நோக்கம், அது உருவான விதம், ஆற்றி வரும் சேவைகள் குறித்து எடுத்துரைத்த அவர், ''விடியலை நோக்கி....'' என்ற தலைப்பிலான இந்த கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் இதர அமைப்புகள் இணைந்து காலத்தின் தேவையை அறிந்து ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. உயர் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் நமது முஸ்லீம் சமுதாயத்தின் பின்னடைவு குறித்து நீதிபதி சச்சார் கமிஷன் கோடிட்டுக் காட்டியுள்ள விபரங்களை எடுத்துரைத்த அவர், இந்த அவல நிலையை களைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இது போன்ற அருமையான நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அரசின் சாதாரண படிப்பிலிருந்து ஆட்சிப் படிப்பு வரையுள்ள உயர் கல்வியை பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசின் ஆட்சிப் படிப்பு குறித்து வழிகாட்ட இங்கே வந்துள்ள பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹமதலி அவர்கள் சமுதாய பற்று மிக்கவர் மட்டுமல்ல பல்வேறு சாதனைகள் செய்தவர், அவரது profile மிகவும் நீண்டது. அதனை வாசிப்பதற்கே நீண்ட நேரம் ஆகும். அந்த அளவுக்கு சாதனைகள் புரிந்தவர். தற்போது சென்னையில் ஐ.ஏ.எஸ் அகாடமி - யை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்த ஊருக்கு வந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் எனில் இது போன்ற அருமையான வாய்ப்புகளை பயன் படுத்திக் கொள்ள மாணவர்களும், பெற்றோர்களும் முன் வர வேண்டும்.இந்த ஊரிலிருந்து பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாக வேண்டும். இதன் மூலம் நமது சமுதாயம் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்'' என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
அதனைத் தொடர்ந்து இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலி, உயர் கல்வி மற்றும் அரசு ஆட்சிப் படிப்பு குறித்த வழிகாட்டு உரையாற்ற வந்த சிறப்பு விருந்தினர்களான எஸ் - ஐ.ஏ.எஸ் அகாடமி - சென்னை, நிர்வாக இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹமதலி மற்றும் சென்னை AMS பொறியியல் கல்லூரி பேராசிரியர் முஹம்மது ரபீக் ஆகியோரை அறிமுகப்படுத்திப் பேசினார்.
துவக்கமாக, “அகில இந்திய நுழைவுத் தேர்வுகளும், உயர்கல்வி படிப்புகளும்'' எனும் தலைப்பில் சென்னை AMS பொறியியல் கல்லூரி பேராசிரியர் முஹம்மது ரபீக் உரையாற்றினார்.
பத்தாம் - பன்னிரண்டாம் வகுப்புகளை நிறைவு செய்த பின், எந்தெந்த மாணவர்கள் என்னென்ன உயர்கல்விப் பிரிவுகளில் - அரசு மானியத்தையும் பெற்று கல்வி கற்கலாம், யார் யாரெல்லாம் கல்வி உதவித்தொகை (Scholarship )வழங்குகின்றனர் என்பன குறித்த விரிவான தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியதாக அவரது உரை அமைந்திருந்தது. அவரது உரையின் இடையிடையே மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார். உரையைத் தொடர்ந்து, மாணவ-மாணவியர் தமது சந்தேகங்களை எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் கேட்க, அதற்கு தேவையான விளக்கத்தை அளித்துப் பேசினார். மேலும் மாணவர்களுக்கு தேவையான விளக்கங்கள், சந்தேகங்களுக்கு தாம் எப்போதும் பதிலளிக்க தயார் எனவும், ஆலோசனைகள் தேவைப்படுவோர் தம்மை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்றும் கூறி அவரது அலை பேசி எண்ணையும் மாணவர்களுக்கு கூறி ஆர்வப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, “விழி ! எழு ! வெற்றி கொள் !'' எனும் தலைப்பில், எஸ் - ஐ.ஏ.எஸ் அகாடமி - சென்னை, நிர்வாக இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹமதலி பேசினார்.
''அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவிகிதம், ஆட்சிப் பணிகளில் முஸ்லிம்களின் சதவிகிதம் எந்த அளவில் உள்ளது. நமது சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான காரணங்கள், என்ன? அதிகார வர்க்கங்கள் நமது சமுதாயத்தை ஆட்டிப் படைப்பது எதனால்? கடந்த காலத்தில் நமது நிலையென்ன? தற்போதைய நிலை என்ன? இருப்பவர்களிலேயே இஸ்லாமிய சமுதாயம் கேடு கேட்ட நிலைக்கு தள்ளப்பட்டு தள்ளாடிக் கொன்டிருப்பதற்குக் காரணம் யார் என்ற வினாக்களுடன் , விரிவான விளக்கத்தை மிகுந்த வேதனையுடனும் , உணர்ச்சி பொங்கவும் உரையாற்றிய அவர் , இனி இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், அதை அடைய வேண்டிய வழி முறைகளையும் எடுத்துரைத்தார். அத்துடன் இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள அற்புதமான சக்தியை அறியாமல், எதற்கும் முயற்சிக்காமல் பின் வாங்கி விடுகிறோம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு திறமை உண்டு. ஆனால் அதை அறிந்து கொள்ள நாம் முயற்சிப்பதே இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்பென்பது இயலாத ஒன்றல்ல. இந்த ஊரில் நூற்றுக்கணக்கானவர்கள் முழு குர்ஆனை மனனம் செய்து சாதிக்க முடியும் எனும் போது இது பெரிய பாரதூரமான ஒரு விஷயமல்ல என்பதை பல உவமைகளுடன் விளக்கினார். மாணவர்களை நேரான, சரியான பாதைக்கு இட்டுச் செல்வதில் பெற்றோர்களுக்கு உள்ள முக்கியமான பங்கை எடுத்துரைத்த அவர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து நமது சமுதாயத்தை தலை நிமிர்ந்து நடக்கச் செய்திட முயல வேண்டும் எனவும், மாணவர்கள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, அரசின் ஆட்சிப் படிப்புகளில் கவனம் செலுத்தி அதில் வெற்றி காண வேண்டும். இதற்கான முயற்சிகளில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட வேண்டும்'' என்றும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான டாக்டர் சேமுமு முஹமதலி அவர்களுக்கு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் ஹாஜி குளம் எம்.ஏ.அஹமது முஹியித்தீன் அவர்களும், பேராசிரியர் முஹம்மது ரபீக் அவர்களுக்கு தம்மாம் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவரும், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஏ .முஹம்மது இத்ரீஸ் அவர்களும் நினைவுப் பரிசை வழங்கி கவுரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மாணவர்களையும், பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, ''நிகழ்ச்சியின் இறுதி வரையில் அமர்ந்து அவதானிக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் அளிக்கப்படும்'' என்று அறிவிப்புச் செய்ததற்கிணங்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கான டோக்கன் வழங்கப்பட்டு, இறுதியில் இதற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் மாணவர்களில் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் எஸ்.எம்.பி.முஷரஃப் அலி, எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் எஸ்.ஜெகதீசன் , மாணவிகளில் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஹெச்.எம்.ஆஃப்ரின், சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி மாணவி எம்.அருணாச்சலப் பேச்சி, பெற்றோர்களுக்கான பரிசை அரூஸிய்யாப் பள்ளித் தெருவைச் சேர்ந்த மஹ்தியா ஆகியோரும் பெற்றனர். மேற்கண்ட ஐந்து பேருக்கும் தலா ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன்கள் அளிக்கப்பட்டு இதற்கான பொருட்களை, அணுசரனையளித்த என்.எஸ்.இ. ஆர்கானிக் ஃ புட் கடையில் (ஆறாம் பள்ளித் தெரு) வழங்கப்பட்டது. இவர்களுக்கான பரிசுக் கூப்பன்களை எஸ் - ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹமதலி, AMS பொறியியல் கல்லூரி பேராசிரியர் முஹம்மது ரபீக், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால் மற்றும் ஹாஜி எம்.ஏ.செய்யது முஹம்மது அலி ஆகியோர் வழங்கி ஊக்குவித்தனர்.
இறுதியாக இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.இ .எல்.நுஸ்கி துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ .தர்வேஷ் முஹம்மது நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியர் , பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இறுதி வரையில் ஆர்வமுடனும், அமைதியுடனுமிருந்து அவதானித்ததனர். மதியம் 1:45 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை - இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் எஸ்- ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகிகளும், தம்மாம், ரியாத் காயல் நல மன்ற அங்கத்தினர்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியன்று IAS பயிற்சிக்கு மிகுந்த ஆர்வம் தெரிவித்த பொறியியல் பட்டதாரி ஒருவர் இக்ராஃ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாக எஸ் - ஐ.ஏ.எஸ் அகாடமி - சென்னையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். இவருக்கான பயிற்சிக்கட்டணத்தை எஸ் - ஐ.ஏ.எஸ் அகாடமி - பொறுப்பேற்றுக் கொள்வதாக அதன் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹமதலி மேடையிலேயே அறிவித்தார். இதர பொறுப்புக்களை இக்ராஃ ஏற்றுக் கொண்டுள்ளது. இது தவிர இரண்டு மாணவர்கள் IAS பயிற்சிக்கு மிகுந்த ஆர்வம் தெரிவித்துள்ளனர். கல்லூரியில் முதலாமாண்டு பயின்று கொண்டிருக்கும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதோடு முற்கூட்டியே இதற்கான ஆயத்தம் செய்வதற்கான வழிகாட்டுதலும் அளிக்கப்பட்டுள்ளது. காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்திட இக்ராஃ உறுதியளித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது
(நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.)
|