வரலாற்றில் முதன்முறையாக, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய இரண்டு அணிகளும் ஒரே ஆண்டில் மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
கோவில்பட்டி கே.ஆர்.சாரதா அரசு மேனிலைப்பள்ளியில், மண்டல அளவிலான கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் - 17 வயதுக்குட்பட்ட சீனியர் அணியினரும், 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் அணியினரும் தகுதிபெற்ற பிற அணியினருடன் போட்டியில் பங்கேற்றனர்.
25.10.2016. செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி சூப்பர் சீனியர் அணியும், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் அணியும் மோதின. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் எல்.கே. மேனிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா பள்ளி அணியுடன் மோதியதில், 1-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் பிரிவிற்கு, 25.10.2016. காலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளி அணியும் மோதின. இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அன்று மாலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா பள்ளியை எதிர்த்தாடி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
எல்.கே. மேனிலைப்பள்ளியின் சீனியர் அணி இத்துடன் 5ஆவது முறையாகவும், சூப்பர் சீனியர் அணி அணி 4 முறையும், மாநில அளவிலான இறுதிப்போட்டியில் தகுதி பெற்றிருந்தபோதிலும், ஒரே பருவத்தில் ஈரணிகளும் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது - பள்ளி வரலாற்றில் இதுவே முதன்முறையாகும் என பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜமால், இஸ்மாஈல் ஆகியோர் கூறினர்.
பள்ளிகளுக்கிடையிலான மாநிள அளவிலான - சூப்பர் சீனியர் அணி கால்பந்துப் போட்டிகள், திருச்சியில் வரும் நவம்பர் மாதம், திருச்சியில் பாரதியார் நாள் விளையாட்டு விழாவாகவும் (Bharathiyar Day Sports - BDS), சீனியர் அணிக்கான மாநில அளவிலான போட்டிகள், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிவகங்கையில் குடியரசு நாள் விழாவாகவும் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்:
L.K.லெப்பைத் தம்பி & M.சதக்
படங்கள்:
A.S.அஷ்ரஃப்
|