செளதி அரேபியா – ஜித்தா, கடந்த 14.10.2016 வெள்ளிக்கிழமை புனித மக்காவில்
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 97-ஆவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 97-வது செயற்குழு கூடி நமதூர் வறியவர்களுக்கு உதவிடும் பொருட்டால், மன்ற அழைப்பினை ஏற்று இந்த மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஓன்று சேர்ந்து நற்பணிகள் செய்திட, மாலை 04:30 மணியளவில் ஜித்தா ஷரபியாவில் உள்ள ஆரியாஸ் உணவகம் முன்பு யாவரும் ஒன்று கூடி,
அவரவர் சொந்த வாகனங்களில் புறப்பட்டு மக்கா நகர் இறை உதவியால் வந்து சேர்ந்தும் மஹ்ரிபு தொழுகைக்கு பின்னர் மன்றத்தின் 97-ஆவது செயற்குழு கூட்டம்
மக்கா,குதை கார் நிறுத்துமிடம் பகுதியில் அமைந்துள்ள ஆசியன் பாலி கிளினிக் உள்ளரங்கில் வைத்து நடைபெற்றது.
வரவேற்பு:
இந்த இனிய நிகழ்விற்கு மன்ற தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹியத்தீன் தலைமையேற்க ஹாபிழ் ஸாலிஹ் அழகிய குரலில் இறைமறை ஓதி துவக்க, சகோ. பாளையம் ஹபீப் முஹம்மது நஜ்ஜார் வந்திருந்தவர்களையும் அகமகிழ அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு வரவேற்றார்.
தலைமையுரை:
அடுத்து தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹியத்தீன், நாம் இந்த மன்றம் மூலம் செய்யும் நல்ல பணிகளை, பலர் மனமுவந்து பாராட்டி பேசியதையும், இன்னும் நமக்காக பிரார்த்தனை செய்வதையும் பயனாளிகளை நாம் நேரில் சென்று சந்திக்கும்போது காண முடிகிறது. தேவையறிந்து வறியவர்களின் வாழ்க்கைக்கு நம்மால் முடிந்ததை நாம் மனமுவந்து உதவி செய்யும் போது அவர்கள் நமக்காக இறைவனிடம் வேண்டும் 'துஆ' என்றும் வீண் போவதில்லை.
நாம் நமது சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் மக்களின் நலனுக்காக இங்கு ஓன்று கூடியிருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு செலுத்தும் சிறு சந்தாவானது ஒரு பெரும் தொகையாக தேவையுடைய பல பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்பதை இங்கே குழுமியிருக்கும் புதிய உறுப்பினர்களுக்கு அறியத் தருகிறோம்.
நாம் செய்யும் இந்த சேவையால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நாம் பெறும் பலன் மிக உயர்வானது எனவே சந்தாக்களை முறைப்படி செலுத்தி இன்னும் கூடுதலாக சேவை புரிந்திட வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக என்று தனதுரையை நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகள் ,
மன்ற செயல்பாடுகள், தீர்மானங்கள் அதன் நிமித்தம் நடேந்தேறிய பணிகள் மற்றும்
இதர தகவல்களை விபரமாக தந்தும் புதிதாக புனிதமிகு மக்கா நகருக்கு அதுவும்
புண்ணியமிகு மஸ்ஜிதுல் ஹரத்திற்கு அருகாமையிலேயே பணிநிமித்தமாக வந்துள்ள இளம் காயல் சொந்தங்களை மனதார வரவேற்றும் தாங்கள் யாவரும் இம்மன்றத்தின் நலப்பணிகளுக்கு இணைந்து செயலாற்றுமாறும் மன்றச்செயலர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மிகுந்த அன்புடன் வேண்டிகொண்டார்.
நம் மக்களுக்காக சேவை செய்யும் நல்ல நோக்குடன் கடந்த 13-ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட இம்மன்றம் பல சேவைகளை எல்லோரின் ஒத்துழைப்பால் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். இப்படி சேவை எண்ணத்துடன் துவங்கிய இம்மன்றம் இறைவனின் அளப்பெரும் கிருபையால், பல பயனாளிகளுக்கு பல இலட்சங்கள் வரை உதவிகள் வழங்கியுள்ளது இது தனி நபரால் வழங்குவது சாத்தியமன்று. எனவே சந்தாவுடன், நன்கொடைதனையும் கூடுதலாக செலுத்துவதோடு, உங்கள் நல்ல பல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாரளமாக வரவேற்கிறோம்.
நம்முடைய எண்ணமெல்லாம் நம் ஊர் வறியவர்களுக்கு உதவுவது தான். நம்முடைய இந்த மன்றம் இரண்டு வகையில் உதவி செய்கிறது. ஒன்று மருத்துவம் மற்றொன்று கல்வி, உயர் கல்விக்கென்று இக்ரா என்ற ஒரு தனி அமைப்பும், மருத்துவத்திற்கு ஷிபா என்ற ஒரு தனி அமைப்பையும் ஊரில் ஏற்படுத்தி அதன் வழியாக நமது உலக காயல் நலமன்றங்கள் உதவி செய்து வருவதை இங்கே புதியதாக வருகை தந்துள்ள சகோதரர்களுக்கு அறிய தருவதுடன் தொடர்ந்து நகர் நலச்சேவை செய்திட நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து செய்யணும் என்று வேண்டி தனதுரையை நிறைவு செய்தார் மன்றத்தின் மற்றுமொரு செயலாளர் சகோ. எம்.எ. செய்யிது இப்ராஹீம்.
நிதி நிலை அறிக்கை:
உறுப்பினர்களால் பெறப்பட்ட சந்தா, நன்கொடைகள், வழங்கப்பட்ட உதவி தொகைகள்
தற்போதைய இருப்பு போன்ற முழு விபரங்களையும் நிதிநிலை அறிக்கையாக சமர்ப்பித்தார் மன்றப்பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ நிதி உதவி:
“ஷிஃபா” மருத்துவ கூட்டமைப்பு மூலம் மருத்துவ உதவி வேண்டி வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டு மன்றத்துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மார்பக புற்று நோய், இருதய அறுவை சிகிச்சை, கிட்னி பாதிப்பு , கண் அறுவை சிகிச்சை, பக்கவாதம்,கற்ப பையில் கட்டி, விபத்தில் கை பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சை, மூலம், குடல் இறக்கம், எலும்பு முறிவு, குடல்புண் , தொண்டை அறுவை சிகிச்சை, ஈரலில் புற்றுநோய், ஆயுர்வேதிக் மற்றும் தொடர் மருத்துவம் என பலதரப்பட்ட பிணியால் பாதிக்கப்பட்டுள்ள மொத்தம் இருபத்தைந்து பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்து, நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது.
கல்வி உதவி:
பொறியியல் கல்விக்கென வந்த 6 மனுக்களை முறைப்படுத்தி, அதற்க்குண்டான நிதிகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர்:
நமது அழைப்பினை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்து கலந்து கொண்ட பெங்களூர் மருத்துவர்கள் செய்யது அஹ்மது மற்றும் மக்கா உம்முல் குரா பல்கலைகழகத்தின் ஜாகிர் அவர்களை மன்ற செயலாளர் சகோ. எம்.எ. செய்யிது இப்ராஹீம் வரவேற்றும் நம் மன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களையும் சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இங்கே வந்து கலந்து கொண்டு உங்களது நடவடிக்கையை உன்னிப்பாக உற்று நோக்கிய போது தங்களின் சேவை தெரிந்து மெய்சிலிர்த்தேன் அல்ஹம்துலில்லாஹ்!
என்ன ஒரு சிறந்த சேவை இதனின் பலாபலன்களை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கி அருள்வான்.
நாங்களும் இது போன்று ஒரு அமைப்பினை ஏற்படுத்தி சேவை ஆற்றி வருகிறோம்.
ஆனால் இதுபோல் அல்ல எத்தனை மனுக்கள் அத்தனையும் வரிசைப்படுத்தி வாசித்து ஒழுங்குமுறையாக அதற்கு நிதி வழங்குவது பெருமைக்குரிய விசியம். இதுபோல்பல காயல் நல மன்றங்கள் பல நாட்டிலும் இருந்து கொண்டு ஒன்றாக உதவி செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் பல சேவைகள் தொடர்ந்து செய்திட நான் பிரார்த்திக்கிறேன் என்று ஹதிஸில் சில உதாரணம் எடுத்து மேற்கோள் காட்டி தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார் மருத்துவர் செய்யது அஹ்மது.
அடுத்து பேசிய மருத்துவர் ஜாகிர் நம் சேவையை கண்கொண்டு பார்த்து மாஷா அல்லாஹ் நல்ல ஒரு அருமையான சேவை. உங்கள் பணி தொடர்ந்து சிறந்து விளங்க
அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் சரீர நல் ஆரோகியத்தையும் தந்தருள்வானாக ஆமீன் என்று பிரார்த்தனை செய்தவராக சுருக்கமாக தனது பேச்சை நிறைவு செய்தார்.
புதிய உறுப்பினர்:
புதிதாய் வருகை தந்துள்ள சகோதரர்கள் தங்களை உறுப்பினர்களாக மன்றத்தில் இணைந்து உரிய சந்தாக்களை செலுத்தியும் தங்களை பற்றிய சுய அறிமுகமும் செய்தும் கொண்டார்கள்.
பிரார்த்தனை:
சகோ.ஏ.ஆர்.அஜிப் நன்றி நவில சகோ,அல்ஹாபிழ் அபூதாஹிர் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
காயலின் மணம்மாறா நெய்ச்சோறு , களரி கறி மற்றும் தால்ச்சாவுடன் இரவு உணவு விருந்தளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான இட ஏற்பாடு , காயலின் இஞ்சி தேநீர் குடியும்,சாலாவடை கடியும் மற்றும் சுவைமிகு இரவு விருந்தும் மக்கா செயற்குழு உறுப்பினர்களின் முழுஅனுசரணையில் சிறப்புடன் செய்யப்பட்டது.
தகவல் மற்றும் புகைப்பட உதவி:
எஸ்.ஹெச்.அப்துல்காதர்
சட்னி, எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
21.10.2016.
|