காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், ரேஷன் கடைகள் - மின் வாரியம் / மின் வினியோகம் - நகராட்சி சேவைகள் ஆகிய துறைகளின் சேவைக் குறைபாடுகள் தொடர்பான “பொதுமக்களின் புகார்கள் பெறும் முகாம்கள்” 25.09.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நகரின் 19 இடங்களில் நடைபெற்றன.
அம்முகாம்கள் மூலம் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, துறை வாரியாக வகைப்படுத்தப்பட்டு, அந்தந்தத் துறைகளில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மூலம் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
துவக்கமாக, கடந்த சில நாட்களுக்கு முன், காயல்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில், அதன் துணைப் பொறியாளர் முருகனைச் சந்தித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
பயன்பாட்டுக்கு அதிகமாக மீட்டர் அளவு காண்பிப்பது, குறைவான மின் அழுத்தம், Tariff மாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பொதுமக்களால் தனிப்பட்ட முறையில் மின் வாரிய அலுவலகத்திற்கு வழங்கப்பட்டும், உரிய நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினர், மின் வாரிய துணைப் பொறியாளரிடம் அளித்து விளக்கம் கேட்டனர். சிலவற்றுக்கு விளக்கமளித்த அவர், பல கோரிக்கைகளை - உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளார். நடவடிக்கை நிலை குறித்து விண்ணப்பதாரர்களுடன் இணைந்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதுபோல, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று, தலைமை மருத்துவர் ராணியைச் சந்தித்து, மருத்துவமனையில் உள்ள வசதிகள், தேவைப்படும் இதர வசதிகள் குறித்துக் கேட்டறியப்பட்டது. அத்துடன், உள் - புற நோயாளிகளைச் சந்தித்து, அவர்களது குறைகளையும் குழுவினரால் கேட்டறியப்பட்டது.
பெறப்பட்ட விபரங்கள் அடிப்படையில், தூத்துக்குடியிலுள்ள சுகாதாரத் துறை மாவட்ட இணை இயக்குநர் மருத்துவர் பானுவைச் சந்தித்து, மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நகரின் நியாய விலைக் (ரேஷன்) கடைகள் மீதான குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டிருந்தது.
பொருள் வாங்கா நிலையில், வாங்கியதாக கைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள், சரக்குகளின் இருப்பு நிலை குறித்து வெளிப்படையின்மை, அதிக குடும்ப அட்டைதாரர்கள் ஒரே கடையில் பொருட்கள் வாங்க வேண்டியிருப்பதால் - நீண்ட நேரம் வரிசையில் காத்திருத்தல், அதன் விளைவாக ஏற்படும் சண்டை - சச்சரவுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் அம்மனுக்களில் அடக்கம்.
இப்புகார்கள் வகைப்படுத்தப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ தகவல் ஆவணங்களும் இணைக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் 17.10.2016. திங்கட்கிழமையன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது மனுக்களாக அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 19.10.2016. அன்று காலையில் - அம்மனுக்களுடன் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சங்கர நாராயணன் காயல்பட்டினம் வருகை தந்து, குறைகளை - “நடப்பது என்ன?” குழும அங்கத்தினரிடமும், பொதுமக்களிடமும் விசாரித்தறிந்தார்.
அரசு விதிகளின் படி, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அதிகப்படுத்தப்படும் என்றும், உரிய இடங்களில் கடைகளைக் காண்பித்தால், அவற்றை வாடகைக்கு எடுத்து, கூடுதல் கடைகளை அமைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் அவர் கூறிச் சென்றார்.
தற்போது, அந்தந்தப் பகுதிகளில் - நியாய விலைக் கடை அமைப்பதற்காக வாடகைக் கட்டிடங்களைத் தேடும் பணியில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினர் களமிறங்கியுள்ளனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் இவ்வனைத்து நடவடிக்கைகளிலும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், நிர்வாகிகளும் - அங்கத்தினருமான எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ, எஸ்.ஏ.நூஹ், ‘மெகா’ நூஹ், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், சாளை நவாஸ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எம்.எம்.முஜாஹித் அலீ, மஜக ஷாஹுல் ஹமீத், ஜஃபருல்லாஹ், அஹ்மத் ஸுலைமான், எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக...
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)
படங்களில் உதவி:
M.M.முஜாஹித் அலீ
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 14:33 / 20.10.2016.] |