முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா - பல்சுவை சன்மார்க்கப் போட்டிகள், நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. 41 மாணவியர் ‘ஆலிமா முஅஸ்கரிய்யா’ பட்டமும், 8 மாணவியர் ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டமும் பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் - சொளுக்கார் தெரு - மவ்லானா அப்பா சின்ன கல் தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, 2016 அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு) காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் பின்வரும் நிகழ்முறைப்படி நடைபெற்றது:-
23.10.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணிக்கு, பட்டமளிப்பு விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள், குருவித்துறைப் பள்ளி வடகீழ்ப் பகுதி மைதானத்தில் ஆண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
சொளுக்கு எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி வரவேற்புரையாற்றினார். ஹாஃபிழ் ஏ.கே.எம்.முஹம்மத் உதுமான் - நபிகளார் புகழோதும் பாடலைப் பாடினார்.
மாலை அமர்விற்குத் தலைமை தாங்கிய - இலங்கை கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, தலைமையுரையாற்றினார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மஹ்ழரா அரபிக் கல்லூரி & முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, மவ்லவீ யு.முஹம்மத் ஸலீம் ஸிராஜீ, மவ்லவீ ஏ.முஹம்மத் ஷபீர் அலீ ஃபாழில் பாக்கவீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் & முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, அஸ்ஸெய்யித் ஃபலாஹ் ஹப்ஷி மவ்லானா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மஃக்ரிப் இடைவேளையைத் தொடர்ந்து துவங்கிய இரவு அமர்விற்கு இலங்கை அஸ்ஸெய்யித் அஹ்மத் நகீப் மவ்லானா தலைமை தாங்கினார். மஹ்ழரா அரபிக் கல்லூரி - ஹாமிதிய்யா - நஸூஹிய்யா மத்ரஸாக்களின் திருக்குர்ஆன் ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத், கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஹாமிதிய்யா ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் வரவேற்புரையாற்றினார்.
மஹ்ழரா & முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தொடர்ந்து, மஸ்னவீ ஷரீஃப் நூல், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உடைய உரைகளடங்கிய குறுந்தகடு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அவையோர் வெளியிட, நகரப் பிரமுகர்கள் துவக்கப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு - ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
கல்லூரியின் ஆண்டறிக்கையை, நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சமர்ப்பித்து, ஸனது பெறும் மாணவியரின் பெயர்களை வாசிக்க, பெண்கள் பகுதியிலிருந்து ஒய்.எஸ்.ஃபாத்திமா பீவி, எஸ்.ஏ.செய்யித் ராபிஆ, எம்.டீ.ஸாரா உம்மா ஆகியோர் மாணவியருக்கு ஸனது - பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.
அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ ஸனது விளக்கவுரையாற்றினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் & தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 43 மாணவியர் - மூன்றாண்டு கல்வியில் தேர்ச்சி பெற்றமைக்காக - ‘ஆலிமா முஅஸ்கரிய்யா’ ஸனதும், திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்தமைக்காக 8 மாணவியர் ‘ஹாஃபிழத்துல் குர்ஆன் ஸனதும் பெற்றனர்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் - காயல்பட்டினம் ஹாஃபிழ்கள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்ற 8 மாணவியருக்கும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கப் பரிசுகளை, அவ்வமைப்பின் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் - கல்லூரி நிறுவனரிடம் வழங்க, பெண்கள் பகுதியில் - பிரதிநிதியின் மனைவி கிதுரு ஃபாத்திமா - பட்டம் பெற்ற மாணவியருக்கு அவற்றை நேரில் வழங்கினார்.
கல்லூரியில் முன்னதாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில், ஒரே அமர்வில் திருமறை குர்ஆனை முழுமையாக பாராமல் ஓதி முடித்த இரண்டு மாணவியருக்கும், திருமறை குர்ஆனின் எந்த வசனத்திற்கும் - தமிழிலோ, ஆங்கிலத்திலோ மொழிபெயர்ப்பைக் கூற - அதன் மூல வாசகத்தை உடனுக்குடன் கூறிய மாணவிக்கும் தலா ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. மாணவியர் சார்பாக அவர்களின் ஆண் உறவினர்கள் அவற்றை மேடையில் பெற்றுக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் அஸ்ஸெய்யித் அஹ்மத் நகீப் மவ்லானா சார்பாக, அவரது உறவினர் வாழ்த்துரையாற்றினார்.
விழாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் - குருவித்துறைப் பள்ளியின் இணைச் செயலருமான கே.எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, நாகூர் தர்ஹாவின் கலீஃபா அஸ்ஸெய்யித் முஹம்மத் கலீஃபா மஸ்தான் காதிரீ துஆ இறைஞ்சலைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் விழா நிறைவுற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியையர், முன்னாள் - இந்நாள் மாணவியர், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, எஸ்.இ.முஹம்மதலீ ஸாஹிப் (டீ.எம்.) ஒருங்கிணைப்பில், எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், நஹ்வீ முத்துவாப்பா, எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், ஹாஃபிழ் ஏ.ஏ.சி.ஹாஃபிழ் அமீர், ஆரிஃப், டீ.ஏ.நூஹ் நஜீயுல்லாஹ், எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர். |