காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், அங்கு தின்பண்டங்களை உட்கொண்ட பின், அவற்றின் கழிவுகளையும், காகிதக் கோப்பை உள்ளிட்ட கழிவுப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே போட்டுவிட்டு, மணற்பரப்பை அசுத்தப்படுத்திச் செல்வது வாடிக்கை.
இக்குறையைப் போக்கி, பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து கடற்கரையில் “தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்துவதென அதன் நிர்வாகக் குழுவால் திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று (28.10.2016. வெள்ளிக்கிழமை) 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சியின் மேலாளரும், ஆணையர் (பொறுப்பு) & சிறப்பு அதிகாரியுமான அருட்செல்வம், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோரைச் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்து ஒத்துழைப்பு கோரினர்.
அவர்களை வரவேற்ற அதிகாரிகள், பொதுமக்களே முன்வந்து இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது மிகுந்த வரவேற்பிற்குரியது என்றும், மனுவில் கோரியுள்ள படி - கடற்கரையில் இருக்கும் குப்பைத் தொட்டியைத் துப்புரவு செய்து வைப்பதாகவும். நகராட்சியின் சார்பிலும் இம்முகாமில் தாங்கள் வந்து பங்கேற்பதாகவும் கூறினர்.
திட்டமிட்ட படி, இன்று 16.30 மணி முதல் 19.30 மணி வரை கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளும் - அங்கத்தினருமான எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ, எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சாளை நவாஸ், எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.கே.ஸாலிஹ், எம்.கே.ஜஃபருல்லாஹ், அஹ்மத் ஸுலைமான், ஸித்தீக், காழி அலாவுத்தீன் ஆகியோரும், காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமியும், கடற்கரை நுழைவாயிலில் முகாமிட்டு, பொதுமக்களுக்கு காகிதப் பைகளை வழங்கி, கடற்கரையில் அவர்கள் மூலம் சேரும் குப்பைகளை அப்பைகளில் இட்டு, வீடு திரும்புகையில் - நுழைவாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுமாறு - பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடற்கரைக்கு வருவோரை நோக்கி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
19.00 மணியளவில் கடற்கரை உட்பகுதிக்குச் சென்ற குழுவினர், அங்கே அமர்ந்திருந்த பொதுமக்கள் - தம் வேண்டுகோளை மதித்து, தமது குப்பைகளைப் பொறுப்புடன் காகிதப் பைகளில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர். கடற்கரை துப்புரவுப் பணிக்கு ஒத்துழைப்பு கோரி - அங்கிருந்த தின்பண்ட வணிகர்களிடமும் குழுவினர் வேண்டுகோள் வைத்தனர்.
பொதுவாக பண்டிகை காலங்களில் கடற்கரைக்கு வரும் பெரும் மக்கள் திரள் காரணமாக, அதன் மணற்பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிப்பது வழமையாக இருக்க, இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடற்கரைக்கு வந்த பெருந்திரளான மக்கள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினருடனும், நகராட்சியுடனும் ஒத்துழைத்த காரணத்தால், நீண்ட நேரத்திற்குப் பின்பும் கூட மணற்பரப்பு குப்பைகளின்றி சுத்தமாகக் காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முகாம் இன்னும் சில நாட்கள் நடத்தப்படும் என்று “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)
|