வடகிழக்கு பருவமழை பொய்த்துள்ள நிலையில் - காயல்பட்டினம் நகராட்சி பகுதியில், குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாகவும், நகரின் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் திரு ம.ரவிக்குமார் IAS அவர்களை நடப்பது என்ன? சமூக ஊடக குழும அங்கத்தினர் இன்று நேரில் சந்தித்தனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து - நடப்பது என்ன? சமூக ஊடக குழும அங்கத்தினர்கள் இன்று (ஜனவரி 11) மாவட்ட ஆட்சியர் திரு ம.ரவிக்குமார் IAS யை தூத்துக்குடியில் நேரடியாக சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை சமர்ப்பித்தனர்.
நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனை
காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது 15 நாட்களுக்கும் மேலாக ஒரு முறை என்ற அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்ட சூழலில் குறைந்தது இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், 10 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்படும் தற்போதைய சூழலில் - குறைந்தது நான்கு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கிட முடியும் என்றும், ஆனால் அவ்வாறு - குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக ஆணையரிடம் (பொறுப்பு) தான் பேசியுள்ளதாகவும், பொன்னங்குறிச்சி பகுதியில் நிலுவையில் உள்ள சிறு பணிகளை ஜனவரி 31 தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வந்து, பிப்ரவரி முதலில் இருந்து குடிநீர் விநியோகம் துவங்கிட அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர், நடப்பது என்ன? குழுவிடம் தெரிவித்தார்.
நிலத்தடி நீர் முறைக்கேடாக உரியப்படுவது சம்பந்தமாக
காயல்பட்டினம் வெள்ளக்கோவில் பகுதியில், சட்டத்திற்கு புறம்பாக நிலத்தடி நீர் உரியப்படுவதை - புகைப்படங்களுடன், நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததது.
ரேஷன் கடைகளில் முறைக்கேடு
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் இயங்கும் ரேஷன் கடைகள் குறித்து - மூடி கிடப்பது, குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பபடாமை, வாங்கப்படாத பொருட்கள் வாங்கப்பட்டதாக பகிரப்படும் குறுச்செய்திகள், பொருட்கள் இருந்தும் இல்லை என கூறப்படுவது, ஒரு பொருளை வாங்கினால் தான் வேறு பொருட்கள் வழங்கப்படும் என கடை பொறுப்பாளர் நிர்பந்தம் செய்வது உட்பட பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்ட பிறகும், அவைகள் குறித்து - சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் - முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
பேருந்துகள் செல்லும் பாதையில் நெருக்கடியை குறைத்திட கோரிக்கை
பேருந்துகள் செல்லும் காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் போக்குவரத்தை முறைப்படுத்த அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்கள் (PARKING AREA) அறிவித்தல், நிரந்தர அடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர் (TRAFFIC POLICE) நியமனம், மாவட்ட ஆட்சியரின் ஒரு வழிப்பாதை ஆணையை முழுமையாக அமல் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை பகுதியை புனரமைக்க கோரிக்கை
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை - தாயிம்பள்ளி சந்திப்பு, அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி அருகில் உட்பட பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ளது. இது சம்பந்தமாக - மாவட்ட ஆட்சியகத்தில் நடைபெறும் திங்கள் குறைதீர் கூட்டங்கள் வாயிலாக, பல மாதங்களாக நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது என்றும், மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது, நிதி ஒதுக்கீட்டுக்கு காத்திருக்கிறோம் என்ற பதிலே வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.
பேருந்துகள் செல்லும் பாதையில் நெருக்கடியை குறைத்திட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இன்று மனு வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருடனான சந்திப்பின் போது - நடப்பது என்ன? சமூக ஊடக குழும நிர்வாகிகள், அங்கத்தினர் - பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், எஸ்.அப்துல் வாஹித், ஏ.எஸ். புஹாரி, சாளை நவாஸ், எம்.என்.அஹமத் சாஹிப் மற்றும் எம்.எஸ்.முஹம்மது சாலிஹு ஆகியோர் இருந்தனர்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |