காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், எல்.கே.மேனிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று (05.01.2017. வியாழக்கிழமை) 15.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் உதவி தலைமையாசிரியர் செய்யித் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையரும் - தனி அலுவலருமான (பொறுப்பு) அறிவுச் செல்வன் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் சிறப்புரையாற்றினார்.
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும் விதம் குறித்தும், அவை வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள், வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அவர், இது தொடர்பாக காயல்பட்டினம் நகராட்சி எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறி, இந்நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறு தத்தம் இல்லங்களில் அனைத்து மாணவர்களும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர். அனைத்து மாணவர்களும் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கு குறித்து நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, , பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் - காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களால் டெங்கு கொசு ஒழிப்பு & பரவல் தடுப்பு துப்புரவுப் பணி செய்யப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்களை இவ்வாறு ஓரிடத்தில் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், ஒரே நாளில் பல நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விழிப்புணர்வுச் செய்திகள் சென்று சேரும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுவதாகவும், நகரின் அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்தடுத்து இந்நிகழ்ச்சியை நடத்திட திட்டம் உள்ளதாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் காயல்பட்டணம்.காம் இடம் கூறினார்.
|