காயல்பட்டினம் நகராட்சிக்கு - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலமாக வழமையாக வழங்கப்படும் 20 லட்சம் லிட்டர் குடிநீர், படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது சுமார் 10 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே (அன்றாடம்) வழங்கப்படுகிறது. இதனால், பல வாரங்களுக்கு ஒரு முறையே நகரில் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்திற்கு குடிநீர் ஏற்றப்படும் மேல ஆத்தூர் பகுதியில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் / அங்கத்தினர் - ஜனவரி 02 அன்று நேரடியாகச் சென்று தகவல்களைச் சேகரித்தனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜனவரி 03) காயல்பட்டினம் நகராட்சி சிறப்பு அதிகாரியைச் சந்தித்து, இது தொடர்பாகக - மூன்று முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது.
அம்மனுவின் நகல், சமூக ஊடகம் வாயிலாக, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
-----------------------------------------
((((((நகராட்சியிடம் சமர்பிக்கப்பட்டுள்ள மனுவின் விபரம்)))))))
-----------------------------------------
காயல்பட்டினம் நகராட்சிக்கு தினசரி - சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர், மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றத்தில் இருந்து வழங்கப்படுவது வழக்கம். தற்போது - வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளதால், ஸ்ரீவைகுண்டம் அணையில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக, 21 லட்சம் லிட்டர் என வழங்கப்பட்டு வந்த குடிநீர் அளவு, படிப்படியாக குறைக்கப்பட்டு - தற்போது தினமும், காயல்பட்டினத்திற்கு - மேல ஆத்தூரில் இருந்து - 10 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என அறிகிறோம்.
அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்கள்படி - தலை ஒன்றுக்கு 90 லிட்டர் குடிநீர், தினமும் வழங்கப்படவேண்டும். தற்போதைய நகர மக்கள் தொகை 45,000 என்ற அடிப்படையில், நகரின் தினசரி தேவை 40 லட்சம் லிட்டர் குடிநீர் ஆகும்.
முந்தைய நீர்வரத்துப்படி (தினமும் 20 லட்சம் லிட்டர்) - இரு தினங்களுக்கு ஒரு முறை, நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால் - பல இடங்களில், 4, 5 நாட்களுக்கு ஒரு முறையும், புற நகர் பகுதிகளில் 10, 15 நாட்களுக்கு ஒரு முறையும் - குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போதைய நீர்வரத்து குறைந்திருந்தாலும் - நான்கு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படவேண்டும்.
ஆனால் - காயல்பட்டினம் நகராட்சியில், 10 - 15 தினங்களுக்கு ஒரு முறையே, குடிநீர் வழங்கப்படுவது - வாடிக்கையாக உள்ளது. எனவே - பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கீழ்காணும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
(1) தற்போதைய குடிநீர் வரத்துப்படியே, 4 தினங்களுக்கு ஒரு முறை - நகரின் அனைத்து பகுதிகளுக்கும், குடிநீர் வழங்க கால அட்டவணை தயார் செய்து, பொதுமக்களுக்கு முற்கூட்டியே அறிவிக்கவும்
(2) நகரின் எந்தெந்த பகுதிகளுக்கு, எந்தெந்த நேரங்களில் - டாங்கர் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது என்ற கால அட்டவணை தயார் செய்து, பொது மக்களுக்கு முற்கூட்டியே அறிவிக்கவும்
(3) நகரின் எல்லையில் அமைந்துள்ள குடிநீர் அளவு பார்க்கும் மீட்டர் பல மாதங்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய உத்தரவிடவும்.
|