காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், அவ்வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்வதைக் கண்டித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
இதனையடுத்து, பெரும்பாலான பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கிறது. எனினும் ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் இன்றளவும் காயல்பட்டினத்தைப் புறக்கணித்துவிட்டு மாற்றுப் பாதையில் செல்வதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறாக, விதி மீறிப் பேருந்துகள் இயக்கப்படுவதையடுத்து, அப்பேருந்துகளில் பயணித்த - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினர், பேருந்துகளில் இருந்தவாறே - தமது பயண விபரம், ஓட்டுநர் - நடத்துநரின் விதிமீறல்கள் குறித்து, தம் பயணச் சீட்டு ஆதாரத்துடன் - குழுமத்தில் தகவல் தெரிவிக்க, அத்தகவல்கள் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளைக் குழுமம் எடுத்து வந்துள்ளது.
நேற்று (01.01.2017. ஞாயிற்றுக்கிழமை) மாலையில் தம் குடும்பத்துடன் பயணித்த - காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் ஹுஸைன், இளையான்குடியில் நின்றிருந்த காரைக்குடி - திருச்செந்தூர் அரசுப் பேருந்தில் ஏறி, காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு கேட்டிருக்கிறார். காயல்பட்டினம் வழித்தடத்தில் அப்பேருந்து செல்லாது என அவரிடம் கூற, அப்பேருந்து காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்ல வேண்டிய பேருந்து என்பதைப் பலமுறை அவர் வலியுறுத்திக் கூறியும், அதைக் கண்டுகொள்ளாத நடத்துநர், காயல்பட்டினத்திற்கு முந்திய ஊரான ஆறுமுகநேரிக்கு பயணச்சீட்டு கொடுக்க, வேறு வழியின்றி அவரும் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.
பேருந்து நடத்துநருக்கு ஆசிரியர் ஹுஸைன் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததையடுத்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்குள் அப்பேருந்து வந்தபோது - சில பயணியர் அதில் ஏறி, காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு கேட்க, நடத்துநரும் பயணச் சீட்டை வழங்கியிருக்கிறார். இதனைக் கண்ணுற்ற ஆசிரியர் ஹுஸைன், தனக்கு மட்டும் காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு தராமல் மறுத்ததற்கான காரணத்தைக் கேட்க, “நீங்க ஆறுமுகநேரியிலிருந்து காயல்பட்டினத்திற்கு இன்னொரு டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்!” என்று நடத்துநர் கூறியிருக்கிறார். இதனையடுத்து, ஆறுமுகநேரியிலிருந்து இன்னொரு பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு அவர் காயல்பட்டினம் வந்தடைந்தார்.
இளையான்குடியில் தனக்கு காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு தர மறுக்கப்பட்டவுடனேயே அவர் சக ஆசிரியர் மூலமாக, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கவே, பேருந்து காயல்பட்டினம் வரும் நேரத்தில், குழும நிர்வாகிகளும், அங்கத்தினரும் அங்கு சென்றனர். இத்தகவலைக் கேள்வியுற்ற சுமார் 150 பொதுமக்களும் பேருந்து நிலையம் அருகில் திரண்டுவிட்டனர்.
22:25 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அப்பேருந்து வந்தபோது, பொதுமக்கள் அதை முற்றுகையிட்டனர். அதிலிருந்து இறங்கிய ஆசிரியர் ஹுஸைன், தனக்கு நேர்ந்த நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினார்.
நிர்ணயிக்கப்பட்ட காயல்பட்டினம் வழித்தடத்தை விட்டுவிட்டு, மாற்றுப் பாதையில் செல்ல முனைந்ததற்கான காரணத்தையும், அதில் பயணித்த ஆசிரியருக்கு காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு கொடுக்காமல் ஆறுமுகநேரிக்குக் கொடுத்ததற்கான காரணத்தையும், பேருந்தின் ஓட்டுநர் சுரேஷ், நடத்துநர் செல்வராஜ் ஆகியோரிடம் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் கேட்க, துவக்கத்தில் அவ்விருவரும் முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசினர்.
அடுத்த சில மணித்துளிகளில் - “தவறாக நடந்துகொண்டதற்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்! இனி வருங்காலங்களில் விதி மீற மாட்டோம்...” என்று கூறவே, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கப்பட்டு, பேருந்து கடந்து செல்ல பொதுமக்கள் வழிவிட்டனர்.
பின்னர் திரண்டிருந்த பொதுமக்களிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் சில விளக்கங்களையும், கோரிக்கைகளையும் எடுத்துரைத்தார்:
காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்துகள் தொடர்பாக - கடந்த 2016 ஜூன் மாதம் முதல் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை விளக்கிப் பேசிய அவர், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சிந்தித்து செயல்திட்டம் தீட்டி, ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து வருகிறது என்றாலும், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாலேயே இன்று எழுபது சதவிகிதப் பேருந்துகள் காயல்பட்டினம் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படுவதாகவும், இன்றளவும் காயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்காக, “சமூகக் கண்காணிப்பு - Community Monitoring” முறையில் வரும் 04.01.2017. புதன்கிழமையன்று ஒரு நாள் முழுக்க 24 மணி நேரம் – சுழற்சி முறையில் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்ற பேருந்துகள் கண்காணிக்கப்பட்டு, இவ்வழித்தடத்தைப் புறக்கணிக்கும் பேருந்துகள் முழுமையாக இனங்காணப்பட்டு, அதனடிப்படையில் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
“காயல்பட்டினம் வழித்தடத்தைப் பேருந்துகள் புறக்கணித்துச் செல்வதற்கு நாமும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறோம்... சாலை விதிகளை மதியாமை, ஒருவழிப் பாதை முறையைப் பேணாமை, இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களைப் பேருந்துப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக முறையற்று நிறுத்துவது உள்ளிட்ட தீய பழக்கவழக்கம் நம்மிடத்தில் இருந்து வருவதே பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்திற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக உள்ளது... நம்மை நாம் சரி செய்துகொண்டால், நம் உரிமைகளை இன்னும் வலிமையுடன் கேட்டுப் பெற இயலும்...” என்று அவர் மேலும் கூறினார்.
ஒரு சில மணித்துளிகளே அவகாசம் இருந்த நிலையிலும், இரவு என்றும் பாராமல் - திரண்டு வந்து உரிமையை நிலைநாட்டியமைக்காக பொதுமக்களுக்கு அவர் நன்றி கூறியதோடு, 04.01.2017. அன்று நடைபெறவுள்ள - பேருந்துகள் சமூகக் கண்காணிப்பில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வருமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
கள உதவி:
‘ஆசிரியர்’ S.A.N.அஹ்மத் மீராத்தம்பி
M.M.முஜாஹித் அலீ
M.A.காழி அலாவுத்தீன் (TAS)
M.W.ஹாமித் ரிஃபாய்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்) |