காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் தற்போது, 10 - 15 தினங்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மை நிலையை கண்டறிய, நடப்பது என்ன? சமூக ஊடக குழும அங்கத்தினர்கள், மேல ஆத்தூரில் உள்ள - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றத்திற்கு நேரடியாக சென்று - விபரங்கள் கேட்டறிந்தனர்.
இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சிக்கு தினசரியாக - சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர், மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றத்தில் இருந்து வழங்கப்படுவது வழக்கம்.
அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டுதல்கள்படி - தலை ஒன்றுக்கு 90 லிட்டர் குடிநீர், தினமும் வழங்கப்படும். தற்போதைய நகர மக்கள் தொகை 45,000 என்ற அடிப்படையில், நகரின் தினசரி தேவை 40 லட்சம் லிட்டர் குடிநீர் ஆகும்.
இந்த அளவுகோள்படியே - இரு தினங்களுக்கு ஒரு முறை, நகரில் குடிநீர் விநியோகம் செய்யலாம். ஆனால் - பல ஆண்டுகளாக அரங்கேறிய, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் கூட்டு முறைக்கேடுகளால் - நகரின் குடிநீர் விநியோகத்தில், பலவித குளறுபடிகள் உள்ளது.
இதனால் - பல இடங்களில், 4, 5 நாட்களுக்கு ஒரு முறையும், புற நகர் பகுதிகளில் 10, 15 நாட்களுக்கு ஒரு முறையும் - குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது - வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளதால், ஸ்ரீவைகுண்டம் அணையில் நீர்வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக, 21 லட்சம் லிட்டர் என வழங்கப்பட்டு வந்த குடிநீர் அளவு, படிப்படியாக குறைக்கப்பட்டு - தற்போது தினமும், காயல்பட்டினத்திற்கு - மேல ஆத்தூரில் இருந்து - 10 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனை காரணமாக கூறி, நகரில் சில இடங்களில் - டாங்கர் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நிலைமையை கண்டறிய, நடப்பது என்ன? குழும நிர்வாகிகள்/அங்கத்தினர், - எஸ்.அப்துல் வாஹித், எம்.டபிள்யு.ஹாமீது ரிபாயி, சாலை நவாஸ், எம்.எம்.முஜாஹித் அலி, எம்.என்.அஹமத் சாஹிப், எஸ்.கே.ஸாலிஹ் - நேற்று (ஜனவரி 2), மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்றம் நிலையத்திற்கு சென்று - விபரங்கள் கேட்டறிந்தனர்.
வழமையை விட 50 சதவீதம் நீர்வரத்து குறைந்திருந்தாலும், தற்போதைய நிலையிலேயே - நான்கு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க முடியும். இருப்பினும் - தற்போது, 10 தினங்களுக்கும் கூடுதலான கால அவகாசத்திலேயே, குடிநீர் வழங்கப்படுகிறது.
இப்பிரச்சனையின் மூல காரணிகளை களைந்தெறிய - அடுத்த கட்ட நடவடிக்கைகளை, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம், இறைவன் நாடினால் -
விரைவில் எடுக்கும்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|