காயல்பட்டினம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு & தனியார் பேருந்துகள் அனைத்தும் - பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து நிறுத்தி, பயணியரை ஏற்ற / இறக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சில பேருந்துகள் இதைப் பேணுவதேயில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் முற்றிலுமாக நுழையாமலேயே சென்று விடுகின்றன.
இன்று (01.01.2017. ஞாயிற்றுக்கிழமை) 22.25 மணியளவில், திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ஒரு தனியார் பேருந்து காயல்பட்டினம் வந்தது. எனினும், அது பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நேரடியாக சாலை வழியே கடந்து சென்றதைக் கண்ணுற்ற காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள், அப்பேருந்தின் முன் மறித்து நின்று, பேருந்து நிலையத்திற்குள் சென்று வருமாறு பணித்தனர்.
“இந்த ஒருமுறை விட்டுவிடுங்கள்... நாளை முதல் பேருந்து நிலையத்திற்குள் செல்கிறோம்...” என ஓட்டுநரும், நடத்துநரும் கூறினர். எனினும், “பேருந்து நிலையத்திற்குள் செல்லாத வரை சாலையில் வழி விட மாட்டோம்!” என அவர்கள் கூறவே, வேறு வழியின்றி அப்பேருந்தை பின்புறமாக (ரிவர்ஸ்) ஓட்டிச் சென்ற ஓட்டுநர், பேருந்து நிலையத்திற்குள் சென்று வெளியேறினார். இதனையடுத்து, அப்பேருந்து சாலையைக் கடந்து செல்ல பொதுமக்கள் வழிவிட்டனர்.
|