காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய கும்பகோணம் மண்டலம் பேருந்துகளை அடுத்த சில தினங்களுக்கு கண்காணிக்க பொது மக்களுக்கு, நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வேண்டுகோள் வைத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவேண்டிய அரசு பேருந்துகள் - பல ஆண்டுகளாக, காயல்பட்டினம் வழியை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இது குறித்து - கடந்த ஜூன் மாதம் முதல், நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் - தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் ஆறு - அரசு பேருந்து கழகங்கள் உள்ளன. அவற்றில் சேலம், விழுப்புரம் ஆகியவற்றில் இருந்து - காயல்பட்டினம் வழியாக எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை.
கோவை மண்டலத்தில் இருந்து, காயல்பட்டினம் வழியாக தினமும் 8 பேருந்துகள் - 16 சேவைகளாக இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் - "வழி காயல்பட்டினம்" என ஸ்டிக்கர்கள் ஒட்டிட, மண்டலத்தின் உயர் அதிகாரிகள் இசைவு தெரிவித்ததை அடுத்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாக ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. தற்போது அம்மண்டலத்தின் அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக செல்கின்றன.
கும்பகோணம் மண்டலத்தில் இருந்து தினமும் 28 பேருந்துகள் - 56 சேவைகளாக, காயல்பட்டினம் வழியில் தினமும் இயக்கப்படவேண்டும். இருப்பினும் - இம்மண்டலத்தின் பல பேருந்துகள் - காயல்பட்டினம் வழியாக இயக்கப்படவில்லை.
நடப்பது என்ன? குழுமம் சார்பாக தொடர்ந்து சென்னையில் உள்ள போக்குவரத்து துறை செயலரிடம் முறையிட்டதை அடுத்து, 15 தினங்களுக்கு அம்மண்டல பேருந்துகளை கண்காணித்து, அறிக்கை ஒன்றினை - கும்பகோணம் மண்டலத்தின் நிர்வாக இயக்குனர், போக்குவரத்து துறை செயலருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் கும்பகோணம் மண்டலத்தின் அனைத்து பேருந்துகளும் - 15 தினங்களுக்கு கண்காணிக்கப்பட்டதாகவும், அவை காயல்பட்டினம் வழியாக செல்வதாகவும், காயல்பட்டினம் வழியாக சென்ற நேரத்தையும் இணைத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவல்களில் - திருச்சி டெப்போ பேருந்துகள் எண்கள், ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பேருந்துகள் எண்களில் இருந்து மாறுபடுகிறது.
மேலும் - ராம்நாடு - திருச்செந்தூர் மார்க்கத்தின், இரு பேருந்துகள் (218F,218G) குறித்த விபரம் முழுமையாக இல்லை.
பெறப்பட்ட தகவல்கள், பொது மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், காயல்பட்டினம் வழியாக அப்பேருந்துகள் செல்லும் நேரத்தை அடிப்படையாக கொண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இணைக்கப்பட்டுள்ள தகவல்களை கொண்டு, பொது மக்களும், அடுத்த சில தினங்களுக்கு கும்பகோணம் மண்டல பேருந்துகளை கண்காணித்து தகவல்கள் வழங்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம், தன்னார்வலர்களை கொண்டும், அடுத்த சில தினங்களுக்கு கும்பகோணம் மண்டல பேருந்துகளை கண்காணிக்கவுள்ளது.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |