காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், அவ்வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்வதைக் கண்டித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
காயல்பட்டினம் வழி கோவை மண்டலப் பேருந்துகள் அனைத்திற்கும், "வழி காயல்பட்டினம்" என்ற ஸ்டிக்கர் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக வழங்கப்பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் அப்பேருந்துகள் அனைத்தும் காயல்பட்டினம் வழியாக தற்போது இயக்கப்படுகின்றன.
இதர மண்டலப் பேருந்துகள், காயல்பட்டினம் வழியாக இயக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம், அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய - கும்பகோணம் மண்டலப் பேருந்துகளை, தொடர்ந்து 15 நாட்களாகக் கண்காணித்து, தமிழக அரசின் போக்குவரத்துத் துறைச் செயலர் அலுவலக சிறப்பு அதிகாரிக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டல நிர்வாக இயக்குநர் அறிக்கை சமர்ப்பித்து, அதன் ஒளிப்பிரதியை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
கும்பகோணம் மண்டலம் உட்பட அனைத்து மண்டலப் பேருந்துகளும் - காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்கின்றனவா என்பதை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தன்னார்வலர்களை கொண்டு - சிறப்பு முகாம்கள் மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)
|