காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்திடத் தூண்டும் நோக்கில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், #iUseGH ஹேஷ் டேக் (Hash Tag) மூலம் பரப்புரை, 26.12.2016. திங்கட்கிழமை முதல் துவக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கி வருகிறது மருத்துவமனை காயல்பட்டினம் அரசு மருத்துவமனை. பல்வேறு வசதிகள் இம்மருத்துவமனையில் இருக்கின்றபோதிலும், சுற்றுப்புறங்களிலுள்ள இதர மருத்துவமனைகளைப் பயன்படுத்துவோருடன் ஒப்பிடுகையில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இம்மருத்துவமனையை - நகர பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தச் செய்ய வேண்டும் எனும் நோக்கில், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், பல்வேறு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துவக்கமாக, ‘தொற்றும் தன்மையற்ற நோய்களுக்கான (Non Communicable Diseases - NCD) பரிசோதனைகள், மருத்துவங்கள்’ குறித்த விளக்கப் பிரசுரம் வெளியிடப்பட்டு, நகர் முழுக்க பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகளவில் இம்மருத்துவமனையைப் பயன்படுத்தத் தூண்டும் நோக்கில், #iUseGH என்ற ஹேஷ் டேக் (Hash Tag) மூலமான பரப்புரையை, 26.12.2016. திங்கட்கிழமையன்று, எளிய நிகழ்ச்சியின் மூலம் துவக்கியுள்ளது “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்.
அன்று 16.00 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சியை, ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றுப் பேசி, எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நிகழ்ச்சியையும் - “நடப்பது என்ன?” குழுமத்தின் சேவைகளையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், முன்னிலை வகித்த - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ராணி ஆகியோர், #iUseGH hash tagஐ விளம்பரப்படுத்தும் பதாகையை - இணைந்து திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து, டாக்டர் இஸ்மத் வாழ்த்துரையாற்றினார்.
“நடப்பது என்ன?” நிர்வாகி எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நன்றி கூற, பிரார்த்தனை - நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் செவிலியர், அலுவலர்கள், பணியாளர்கள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் அங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ட்விட்டர் (Twitter) சமூக ஊடகத் தளம் மூலம் மேற்கொள்ளப்படும் இப்பரப்புரையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அனைவரும் - தம்மையும் இணைத்துக்கொள்ளும் வகையில், திறந்து வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை முன் நின்றவாறு “நான் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்துவேன்” என உறுதி கூறி, படம் எடுத்துக்கொள்ள, அவையனைத்தும் ட்விட்டர் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பதிவேற்றப்பட்ட படங்கள் வருமாறு:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள் இந்த விளம்பரப் பதாகை முன் நின்று படமெடுத்து, #iUseGH என்ற Hash Tagஐப் பயன்படுத்தி, ட்விட்டர் சமூக ஊடக இணையதளத்தில் அவற்றைப் பதிவேற்றிக்கொள்ளலாம்..
இப்பரப்புரையைத் தமிழகம் தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்லவும் திட்டமுள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஆலோசகர்களும், அங்கத்தினருமான - எஸ்.அப்துல் வாஹித், பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, ‘மெகா’ நூஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சாளை நவாஸ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அப்துல் அஜீஸ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.கே.ஸாலிஹ், மலபார் காயல் நல மன்ற (மக்வா) தலைவர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ், எழுத்தாளர் சாளை பஷீர், எம்.எம்.யாஸீன், எம்.கே.ஜஃபருல்லாஹ், அஹ்மத் ஸுலைமான், எம்.எம்.ஷாஜஹான், எம்.பீ.செய்யித் முஹம்மத் ஸாஹிப், எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS) உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்) |