காயல்பட்டினம் நகராட்சி சார்பில், கடையக்குடி (கொம்புத்துறை)யில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவில், ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்ப்பதாக பொதுமக்கள் உறுதியெடுத்துள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டுக்குட்பட்ட கடையக்குடி (கொம்புத்துறை)யில், நகராட்சியின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, 26.12.2016. திங்கட்கிழமையன்று 19.30 மணியளவில், கொம்புத்துறை தேவாலய வெளிவளாகத்தில் நடைபெற்றது.
ஊர் தலைவர் போர்ட் ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் நகராட்சியின் தனி அலுவலரும் - ஆணையருமான (பொறுப்பு) அறிவுச் செல்வன் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் - குறிப்பாக கடலில் ப்ளாஸ்டிக் கழிவுகள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தமிழகத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கவழக்கத்தை மாற்றி, அனைத்து வீடுகளிலும் கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்க ஆவன செய்யப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகள் இருப்பின், அவர்கள் விண்ணப்பித்தால் - அவ்வீடுகளில் கழிப்பறை அமைக்க நகராட்சி ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார்.
கொம்புத்துறை தேவாலய பங்குத் தந்தை மரியா ஜான் நன்றியுரையாற்றினார்.
இப்பகுதி பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்றும், ப்ளாஸ்டிக் பொருட்களை - குறிப்பாக தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என கடந்த அக்டோபர் மாதத் துவக்கத்திலிருந்தே அவர்கள் சபதம் எடுத்துள்ளதாகவும், இன்றளவும் அதை உறுதியுடன் கடைப்பிடிப்பதன் காரணமாக, இப்பகுதி மக்கள் எந்தக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினாலும், அங்குள்ள ஊழியர்கள் இவர்களை அடையாளங்கண்டு - ப்ளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்காமல் தவிர்த்து வருவதாகவும், இப்பகுதியில் உள்ள எந்தக் கடைகளிலும் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் அறவே இல்லை என்றும் கூறி, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கொண்டுள்ள அக்கறைக்கு, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்
|