காயல்பட்டினம் நகராட்சி சார்பில், லெட்சுமிபுரத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்திட பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் 14ஆவது வார்டுக்குட்பட்ட லெட்சுமிபுரத்தில், நகராட்சியின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
ஊர் தலைவர் சந்திரன் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தமிழகத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கவழக்கத்தை மாற்றி, அனைத்து வீடுகளிலும் கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்க ஆவன செய்யப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் கழிப்பறை இல்லாத வீடுகள் இருப்பின், அவர்கள் விண்ணப்பித்தால் - அவ்வீடுகளில் கழிப்பறை அமைக்க நகராட்சி ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மகளிர் திரளாகக் கலந்துகொண்டனர். பல்வேறு அலுவல்களுக்கிடையிலும், அழைப்பையேற்று ஓரிடத்தில் திரண்டு வந்து நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்காக - அவர்களுக்கு நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்
|