காயல்பட்டினத்தில் சுகாதாரக் கேட்டைத் தவிர்த்திட, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் போதிய அளவில் குப்பைத் தொட்டிகளை வைத்திடுமாறு, காயல்பட்டினம் நகராட்சிக்கு - இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே குப்பைத் தொட்டி வைக்கப்பட்ட இடங்களில் - நிறைந்த பெட்டிகளை எடுத்துச் சென்ற பின், மீண்டும் வைக்காமல் விட்டுள்ளதால் அப்பகுதிகளில் தரைகளிலேயே பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிச் செல்வதாகவும், நிறைந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துச் சென்று மீண்டும் அதே இடத்தில் வைக்கும்போது, அவற்றைத் துப்புரவு செய்யாத நிலையிலேயே வைப்பதால் கடும் துர்வாடை வீசுவதாகவும், இன்றளவும் நகரின் பல இடங்களில் குப்பைத் தொட்டிகளே வைக்கப்படாதது போன்றவற்றின் காரணமாக நகரில் கடும் சுகாதாரக் கேடு நிலவி வருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்குறைகளைப் போக்க, நகரின் தேவையான பகுதிகள் அனைத்திலும், சுத்தம் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகளை வைக்குமாறும், மாற்றுத் தொட்டிகளை ஓரிடத்தில் வைத்த பின்னரே - அங்குள்ள நிறைந்த குப்பைத் தொட்டியை எடுத்துச் செல்வதை வழமையாகக் கொள்ளுமாறும் அக்கடிதத்தில், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கேட்டுக்கொண்டுள்ளார்.
|