காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், அங்கு தின்பண்டங்களை உட்கொண்ட பின், அவற்றின் கழிவுகளையும், காகிதக் கோப்பை உள்ளிட்ட கழிவுப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே போட்டுவிட்டு, மணற்பரப்பை அசுத்தப்படுத்திச் செல்வது வாடிக்கை.
இக்குறையைப் போக்கி, பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து கடற்கரையில் “தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்துவதென அதன் நிர்வாகக் குழுவால் திட்டமிடப்பட்டு, கடற்கரையில் மக்கள் திரள் எதிர்பார்க்கப்படும் நாட்களில் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையின் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
“நடப்பது என்ன?” குழும ஆலோசகர்கள், நிர்வாகிகள், தன்னார்வலர்கள் இணைந்து தூய்மை விழிப்புணர்வு களப்பணியாற்றினர். அவர்களுள் ஒரு பிரிவினர், இருசக்கர - நாற்சக்கர வாகனங்களில் வந்தோரிடம் வாகனங்களை ஓரமாகவும், வரிசையாகவும் நிறுத்துமாறும், நுழைவாயிலை மறைத்து நிறுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் அதற்கு ஒத்துழைப்பளித்தனர்.
ஒருபுறம் ஒலிபெருக்கி வழியே தூய்மை விழிப்புணர்வு அறிவுரைகள் பொதுமக்களுக்கு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் தன்னார்வலர்களுள் ஒரு பிரிவினர் - கடற்கரைக்கு வந்த பொதுமக்களுக்கு காகித உறைகளை வழங்கி, குப்பைகளை அவற்றில் சேகரித்து வைத்துக்கொண்டு, வீடு திரும்புகையில் கடற்கரை நுழைவாயிலில் காயல்பட்டினம் நகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் அவற்றைப் போட்டுச் செல்லுமாறும், இனி வருங்காலங்களில் குப்பைகளுக்கென ஒரு காகிதப் பையைக் கொண்டு வருவதை வழமையாக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.
கடற்கரையின் உள்ளே ஆங்காங்கே அமர்ந்திருந்த பொதுமக்களிடையே - குறு ஒலிபெருக்கி மூலமும் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பரப்புரைகளைச் செய்தனர்.
கடற்கரை துப்புரவுப் பணிக்கு ஒத்துழைப்பு கோரி - அங்கிருந்த தின்பண்ட வணிகர்களிடமும் குழுவினர் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், தம் வேண்டுகோளை மதித்து, தமது குப்பைகளைப் பொறுப்புடன் காகிதப் பைகளில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஆலோசகர்களும், அங்கத்தினருமான - எஸ்.அப்துல் வாஹித், பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, ‘மெகா’ நூஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ‘நெட்காம்’ புகாரீ, எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சாளை நவாஸ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அப்துல் அஜீஸ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.கே.ஸாலிஹ், மலபார் காயல் நல மன்ற (மக்வா) தலைவர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ், அதன் செய்தி தொடர்பாளர் மீரான், எழுத்தாளர் சாளை பஷீர், எம்.எம்.யாஸீன், ஹாங்காங் அபூ, அஹ்மத் ஸுலைமான், ரிஃப்அத் உமர், அபூபக்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)
|