ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் புதிய கட்டிடப் பணிகள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம், 09.12.2016. வெள்ளிக்கிழமையன்று, துபையிலுள்ள - ஜமாஅத்தின் தலைவர் விளக்கு தாவூத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. ஏ.பி.சாமு ஷிஹாபுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
>>> அண்மையில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற - தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனத் திறனாய்வுப் போட்டியின் பிறகு பெறப்பட்ட பின்னூட்டங்களின் அடிப்படையில், அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களின் திறனை வளர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல்...
>>> அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆகியவற்றின் கட்டிடப் பணிகள் மேம்பாடு...
உள்ளிட்டவை குறித்து, இக்கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு - தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள், காயல்பட்டினத்திலுள்ள மேற்படி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அமைப்பின் விரிவான பொதுக்குழுக் கூட்டத்தை, விரைவில் அமீரகத்தில் நடத்திடவும், வெளிநாடுகளிலுள்ள அஸ்ஹர் ஜமாஅத் அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஜமாஅத்தின் பணிகளை இன்னும் மேம்படுத்தி - சிறப்புற செய்திடவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறப்பட்டு, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபையிலிருந்து...
தகவல் & படங்கள்:
K.S.முஹம்மத் யூனுஸ் |