காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட கோரி - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, நகராட்சியின் சிறப்பு அதிகாரி திரு அறிவுச்செல்வனிடம் மனு ஒன்று - புதனன்று (டிசம்பர் 28) வழங்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காயல்பட்டினம் நகராட்சி தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஊராகும். 4000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு கொண்ட இவ்வூரில், பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
சீமை கருவேல மரங்கள் (PROSOPIS JULIFLORA) - நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கிறது என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்றும் பல்வேறு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், வழக்கு ஒன்றில் டிசம்பர் 20 அன்று உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழகத்தின் 13 மாவட்டங்களின் தலைநகர்களில் இம்மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு முதல் கட்ட உத்தரவே. இந்த மரங்களால் - மாவட்ட தலைநகர்கள் மட்டுமல்ல, மாநிலத்தின் இதர பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே - நீதிமன்றம், தனது அடுத்த அமர்வுகளில், இந்த ஆணையை மாநிலத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே - இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொய்த்துள்ளதால் உருவாக வாய்ப்புள்ள நிலத்து நீர் மட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது நகராட்சியின் இன்றியமையாத கடைமைகளில் ஒன்று என்பதனை கருத்தில் கொண்டும் - உடனடியாக, தனியார், அரசு என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் நகரின் அனைத்து நிலங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |