காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பற்ற நிலையில் உள்ளன. மேலும் - அதே வளாகத்தில் உள்ள, தாய்ப்பாலூட்டும் அறையும் - கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, பல நாட்களாக மூடிய நிலையில் உள்ளது.
இது குறித்து நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக வியாழனன்று (டிசம்பர் 29) - காயல்பட்டினம் நகராட்சியின் சிறப்பு அதிகாரி திரு அறிவுட் செல்வனிடம், இரு மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களில் உள்ள விபரங்கள் வருமாறு:
பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் குறித்த மனு
திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்படவேண்டிய நோக்கத்தில் அரசு - பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதை மக்கள் அனைவரும் அறிவர்.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் பல்வேறு மக்கள் வந்து, செல்லும் இடமாகும். இவ்வளாகத்தில், பேருந்து நிலையம் உட்பட அம்மா உணவகம், ரேஷன் கடை, நூலகம், பத்திர பதிவு அலுவலகம், ஆதார் பதிவு அலுவலகம், வணிக கடைகள் என பல்வேறு மக்கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் உள்ளது.
இவ்வளாகத்தில் அமைந்துள்ள நகராட்சி கழிப்பிடம் - பராமரிப்பற்று உள்ளது. பல அறைகள் மூடப்பட்டும், திறக்கப்பட்டுள்ள அறைகள் சரியாக பராமரிக்கப்படாமலும் உள்ளன.
இந்நிலையில் கழிப்பறைகள் இருப்பது - சுகாதார கேடு மட்டுமல்ல, பொது மக்கள் - பயன்படுத்துவதை விரும்பாத நிலையை உருவாக்குவதும் ஆகும். எனவே - இக்கழிப்பறிகளையும், நகரில் உள்ள அனைத்து பொது கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திட பணிகளை செய்யும்படி தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு செய்யப்படவில்லை என்றால் - திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத ஊர் என்பது வெறும் கோஷமாக தான் இருக்கும் என்பதனையும் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
பேருந்து நிலையத்தில் உள்ள தாய்ப்பாலூட்டும் அறையின் தற்போதைய நிலை குறித்த மனு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு - காயல்பட்டினம் பேருந்து நிலையம் உட்பட - தமிழகத்தின் 351 பேருந்து நிலையங்களில், மகளிர் தம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டுவதற்காக தனியறைகள் திறக்கப்பட்டன.
காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலும் திறக்கப்பட்ட இந்த அறைகள் தற்போது - கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அறைகள் 24 மணி நேரமும் பூட்டிய நிலையில் உள்ளது. பெருத்த பொருட்செலவில் அமைக்கப்பட்ட இந்த அறை, இவ்வாறு பராமரிப்பற்று இருப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே - உடனடியாக இந்த அறையை சரி செய்து, தாய்ப்பாலூட்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு விட - கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அம்மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |