காயல்பட்டினம் நகராட்சி - பப்பரப்பள்ளி பகுதியில் (சர்வே எண் 42/1) 20 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக, அங்கு கொட்டப்படும் குப்பைகள் சில விஷமிகளால் தீயிடப்பட்டு, பெரும் சுகாதாரக் கேடு உருவாக்கப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் - குப்பைகள் தீ எரிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெறும்போதெல்லாம், இதுகுறித்த புகார்களை - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியோரிடம் புகார்களை சமர்ப்பித்துள்ளது.
அப்புகார்களைத் தொடர்ந்து, குப்பைகளை எரிப்பதை நகராட்சி தடுக்கவேண்டும் என்றும் (செப்டம்பர் 19), தீ மூட்டுபவர்கள் மீது FIR பதிவு செய்யவேண்டும் என்றும் (அக்டோபர் 31) மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டிருந்தது. இருப்பினும், இதுவரை நகராட்சி சார்பாக எந்தப் புகாரும் காவல்துறையிடம் பதிவு செய்யப்படவில்லை.
இவ்வாறிருக்க, மீண்டும் நேற்று (03.01.2017. செவ்வாய்க்கிழமை) 18:30 மணியளவில், பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கில் சில விஷமிகளால் தீ மூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆறாவது முறையாக (19-9-2016, 24-9-2016, 2-10-2016, 8-10-2016, 23-10-2016), மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியோரிடம் - நிழற்பட ஆதாரங்களுடன், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் புகார் அளித்துள்ளது.
|