காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் 15 நியாயவிலை (ரேஷன்) கடைகள் உள்ளன.
ஆனால், நகரின் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டால், ரேஷன் கடைகளின் எண்ணிக்கை சுமார் 30 என்று இருக்க வேண்டும்.
இது தொடர்பாக, துறை அதிகாரிகளிடம் – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம், மனுக்கள் வழங்கியது. அதற்கு பதில் கூறிய அதிகாரிகள், வாடகை அடிப்படையில் இடம் தரப்பட்டால், புதிய நியாயவிலை (ரேஷன்) கடைகளைத் திறந்திட அரசு உத்தரவிடும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நகரின் அனைத்து ஜமாஅத்துகள் / ஊர் நல கமிட்டிகளிடம், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தற்போது கோரிக்கைக் கடிதத்தை வழங்கி வருகிறது. அக்கடிதத்தின் வாசகம் வருமாறு:-
காயல்பட்டினத்தில் தற்போது 15 ரேஷன் கடைகள் உள்ளதை தாங்கள் அறிவீர்கள். சில ரேஷன் கடைகளில் 1000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு கடைக்கு சுமார் 300 - 400 அட்டைகள் இணைக்கப்பட்டு இருப்பதே சிறந்ததாகும். [பார்க்கவும் இணைப்பு]
அளவுக்கதிமாக ரேஷன் அட்டைகள் இணைக்கப்பட்டிருந்தால், பொது மக்கள் அந்த கடைகளின் மூலம் பொருட்கள் பெறுவதில் பல அசௌகரியங்கள் அடைகிறார்கள். இது குறித்து எமது குழுமம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளது.
தங்கள் பகுதியில் உள்ள பொது மக்கள் பயனடையும் நோக்கில், தங்கள் வளாகத்தில் / தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வளாகத்தில் உள்ள காலியான கடை ஒன்றினை - ரேஷன் கடை பயன்பாட்டுக்காக, வாடகை அடிப்படையில் வழங்கிட தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு இடம் தரப்படும் பட்சத்தில், பிற கடைகளில் உள்ள உங்கள் பகுதி அட்டைகளை, புதிய கடைக்காக பிரித்திட, அரசு அதிகாரிகள் தயாராக உள்ளார்கள். எனவே - இது குறித்து நல்ல முடிவை தாங்கள் விரைவில் வழங்கிட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |