சவுதி அரேபியா - ஜித்தா, கடந்த 23.12.2016 வெள்ளிக்கிழமை ஜித்தாவில் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 99-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல ஏக நாயனின் பேரருளால், சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 99-ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 23.12.2016 வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் ஜித்தா – ஷரஃபியாவில் அமைந்துள்ள இம்பாலா கார்டன் உணவகத்தில் வைத்து, இம்மன்றத்தின் தலைவர் சகோ. குளம் எம்.எ.அஹமது முஹிய்யதீன் தலைமை ஏற்று நடத்த, சகோ. எம்.ஐ.அப்துல் பாஸித் இறைமறை ஓதி துவக்க, சகோ. எஸ்.ஹெச். அப்துல்காதர் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
அதன் பின் தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹமது முஹிய்யதீன் இம்மன்றத்தின் கடைசி அமர்வு இது, அதன் பின் பொதுக்குழு, பிறகு புதிய நிர்வாக உறுப்பினர்களுடன் செயற்குழு தொடரும் இன்ஷா அல்லாஹ். இப்பொழுது சில குறிப்புகளை வைத்து இருக்கிறேன். அது சம்பந்தமாக நாம் கூட்டத்தை தொடர வேண்டும். இந்த மன்றத்தில் சில கருத்துக்களை நாம் பரிமாறிக் கொள்ளும்போது, வாதங்களுக்கு பின் மன்றம் கலைந்ததும் இது சம்பந்தமாக நாம் யாரும் வெளியில் சென்று வாதங்களை தொடர்வதில்லை, அதுதான் இம்மன்றத்தின் மிக தனிச் சிறப்பு. நம் மன்றம் ஜனநாயாக முறைப்படி இயங்கி வருகிறது. இப்போது நாம் கூடியிருக்கும் இந்த செயற்குழுவில் சில குறிப்புகளுக்கு நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே உங்களது கருத்துக்களை மிக தாரளமாக கருத்து பரிமாறும் வேளையில் இங்கு பதிவு செய்யலாம். என்று வேண்டிக்கொண்டு தனது சுருக்க உரையை நிறைவு செய்து அமர்ந்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த 25-11-2016 வெள்ளியன்று மன்றம் சார்பாக யான்பு சென்று வந்த செய்திகள், அங்கு நம் சகோதரர்களின் அன்பான வரவேற்பு, உளமான உபசரிப்புகளை நினைவு கூர்ந்ததோடு அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து, மேலும் மன்றத்தின் செயல்பாடுகள் கடந்த கூட்டத்தின் தீர்மானங்கள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளின் விபரங்களையும் எடுத்துக்கூறினார், செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே. செய்து மீரான்.
யான்புவில் நடந்த சென்ற செயற்குழுவில் நான் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது நினைத்து வருந்துகிறேன். அது ஒரு சிறு பொதுக்குழு போல் இருந்தது அறிந்து சந்தோஷம். இங்கு சில முக்கியமான விசியங்களை நாம் கலந்துரையாட வேண்டியதுள்ளது. அதில் குறிப்பாக முதலில் நமது ஐக்கிய பேரவையில் இருந்து உறுப்பினர் வேண்டி வந்த கடிதத்தின் நடப்புதனையும், அந்த பிறகு ஷிபா மூலமாக நமதூருக்கு Generic Medicine கடை திறக்க இருப்பதையும் முதலில் அறிய தருகிறேன். இந்த மருந்தகம் இந்தியாவில் பல பாகங்களிலும் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒரு இடத்தில் மட்டும் தான் உள்ளது, இரண்டாவதாக நமதூரிலே ஷிபா மூலமாக திறக்க இருக்கிறோம். சகாய விலையில் கிடைக்கும் மருந்துகள் மூலம் நமதூர் மக்கள் பயன் பெறுவார்கள் , குறிப்பாக ஏழை ஏளியவர்கள் இதனால் மிக பயன் அடைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதனைப் பற்றிய விளக்கம் ஷிபாவின் தொடர்பாளர் சகோ. சீனா தருவார் என்றும், மன்றத்தின் சீரிய பணிகள் மற்றும் நடக்கவிருக்கும் பொதுக்குழு குறித்தும் அறியத்தந்து, குடும்ப சங்கமமாக நாம் நடத்தவிருக்கும் நம் மன்ற பொதுக்குழு குறித்த உறுப்பினர்களின் கருத்துக்களை கூறுமாறும் வேண்டிக்கொண்டு, அப்பொதுக்குழு சம்பந்தமாக சிறப்பு துணைக்குழு அமைத்து, வரும் பொதுக்குழுவை மிகச்சிறப்பாக நாம் நடத்த வேண்டுமென்றும் கூறினார். அதற்கான பணிகளை நாம் இப்போதே துவக்கி உறுப்பினர்களை களப்பணிகளில் தயார் படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார். மன்றச்செயலாளர் சகோ.எம்.எ.செய்யிது இபுராஹீம்.
உலக நலமன்றங்களின் கூட்டமைப்பான ஷிபாவின் புதியதோர் உதயம், "மக்கள் மருந்தகம் " என்ற பெயரில் நகர மக்களின் தேவையையும் பொருளாதரத்தையும் கருத்தில் கொண்டு ஜெனரிக் மருந்தகம் என்ற திட்டத்தை ஷிஃபா விரைவில் நமதூரில் அமுல்படுத்த தாஹா வணிக வளாகத்தில் கடை திறப்பதற்கான ஆயத்தவேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது. என்ற நல்ல செய்தியை முதலில் தந்து, அதற்க்குண்டான நிதிகளை பல காயல் நல மன்றங்கள் பங்களிக்க இருப்பதையும், நாமும் அதில் பங்களிக்க வேண்டி, வந்த நகலையும் மற்றும் மருந்துகளின் விலை வித்தியாசங்களையும், அதற்க்குண்டான மொத்த செலவினங்களையும் அழகாக எடுத்துரைத்து அமர்ந்தார் சகோ.சீனா எஸ்.ஹெச் . மொகுதூம் முஹம்மது.
தொடர்ந்து பேசிய சகோ. ஷேக் அப்துல்லாஹ் நாம் ஏற்கனவே தீர்மானித்து, மாணவர்களுக்கு மத்தியில் நடத்த இருந்த கல்வி வழிகாட்டி செயல்முறை திட்டம் சில காரணங்களால், மாணவர்களின் தேர்வு தள்ளி போக அதன் பின் காலதாமதமாக தேர்வு முடிந்து, அடுத்து அவர்களின் கவனம் ஆண்டு தேர்வை நோக்கி இருப்பதால், பாடசாலைகளில் அதற்க்கு நேரம் சரியாக ஒதுக்க முடியாத காரணத்தையும் கவனத்தில் எடுத்து, இன்ஷா அல்லாஹ் இனி அடுத்து இக்ராவுடன் கலந்தாலோசித்து ஐவர் கொண்ட குழு முடிவெடுக்கும் என்ற கருத்தை அங்கே பதிவு செய்தார்.
நிதி நிலை அறிக்கை:
வரவேண்டிய சந்தாக்கள், பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் விடுப்பு போன்ற முழு விபரங்களையும் நிதி நிலை அறிக்கையாக சமர்பித்தார் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழுடன், மருத்துவ உதவி வேண்டி ஷிஃபா மூலமாக வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு, வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு; கண் அறுவை சிகிச்சை, கருப்பப்பை கட்டி அறுவை சிகிச்சை, விபத்தில் கால் எலும்பு முறிவால் அவதிவுறும் சிறுவனுக்கு சிகிச்சை, குழந்தையின் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக எடுத்த மருத்துவச் செலவு, என பாதிப்புக்குள்ளான ஐந்து பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவுசெய்யப்பட்டு, அதற்க்கான நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அவர்களின் பூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
தீர்மானம்:
1. காயல்பட்டினம் ஐக்கிய பேரவையிலிருந்து, பேரவைக்கு இம்மன்ற பிரதிநிதி வேண்டி வந்த வேண்டுதல் கடிதம் உறுப்பினர்கள் முன் வாசிக்கப்பட்டு கருத்து பரிமாறியதில், இம் மன்றத்தின் செயல் திட்டத்தில் இல்லாததால் அதில் இணைவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
2. கடந்த செயற்குழு யான்புவில் நடைபெறுவதற்கு இடம் அளித்து, நல்லதோர் சந்திப்பை சிறப்பாக ஏற்பாடு செய்திட்ட கலவா சகோதரர்களுக்கும் மற்றும் யான்பு காயல் சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிதனையும், பாராட்டுக்களையும் இம்மன்றம் தெரிவிக்கிறது.
3. ஷிபா மிக விரைவில் நம் ஊரில் திறக்க இருக்கும் (Generic Medicine) சகாய விலையில் “மக்கள் மருந்தகம்” திட்டத்தில் இம்மன்றம் தனது பங்களிப்பை வழங்கவும் உறுதி செய்யப்பட்டது.
4. அடுத்து இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி மாதம் பத்தாம் நாள் (10.02.2017) வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி முதல் மாலை 08:00 மணி வரை ஜித்தா சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்துள்ள "அஸ்ஸஃப்வா" எனும் ஓய்வில்லத்தில் வைத்து, மன்றத்தின் 100-ஆவது செயற்குழு, 8வது அமர்வில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல், மன்றத்தின் 15ஆம் ஆண்டு துவக்கம், 37வது பொதுக்குழு, மற்றும் காயலர் குடும்ப சங்கமம் என இப்பொதுக்குழுவை ஐம்பெரும் விழாவாக நல்ல முறையில் சிறப்பாக நடத்திட முடிவுசெய்யப்பட்டு, அதற்காக ஓர் துணைக்குழு அமைக்கப்பட்டது.
நன்றி நவிலல்:
உறுப்பினர்களின் நல்ல பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சகோ. எம்.எம்.எஸ். ஷேக் அப்துல்காதர் நன்றி கூற சகோ. பிரபு எஸ்.ஜே. நூருதீன் நெய்னா பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
கூட்ட ஏற்பாடுகளை சகோ. சட்னி எஸ்.ஏ.கே. செய்து மீரான் மற்றும் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் நல்லபடி செய்து இருந்தார்கள்.
தகவல் மற்றும் புகைப்பட உதவி:
எஸ்.ஹெச்.அப்துல்காதர்
சட்னி, எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
23.12.2016.
|