காயல்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளாக, திருட்டு, கொலை, போதைப் பொருட்கள் / மதுபானம் விற்பனை உட்பட பல வகையான குற்றங்கள் பெருகியுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, நகரின் பொது வீதிகளை 100 சதவீதம் CCTV கேமராக்கள் கண்காணிப்பில் கொண்டு வரவும், வெளியூர்களிலிருந்து வாடகை வீடுகளில் குடியேற வருவோரின் விபரங்களைப் படிவங்களில் சேகரித்து வைக்கவும் - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - நகரின் அனைத்து ஜமாத்துகளுக்கும் / ஊர் நல கமிட்டிகளுக்கும் வேண்டுகோள் கடிதம் வழங்கப்படுகிறது.
அக்கடிதத்தின் வாசகம் வருமாறு:-
காயல்பட்டினம் நகரில் - கடந்த சில ஆண்டுகளாக, திருட்டு, கொலை, போதைப் பொருட்கள் / மதுபானம் விற்பனை உட்பட பல வகையான குற்றங்கள் பெருகியுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். அவ்வித குற்றங்கள் தொடர்ந்து நம் நகரில் நடைபெறாதிருக்க - ஒரு வழிமுறையாக, நகரின் சாலைகளை - 100 சதவீதம் CCTV கேமரா கண்காணிப்பில் கொண்டு வர அனைத்து ஜமாத்துகளுக்கும், ஊர் நல கமிட்டிகளுக்கும் - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக கடந்த ஜூலை மாதம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் CCTV கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், பெருவாரியான பொது வீதிகள் CCTV கண்காணிப்பில் - இன்றளவும் இல்லாமல் உள்ளது. நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, தங்கள் பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்துவதை துரிதப்படுத்த தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை, புது டில்லி போன்ற நகரங்களில் - வாடகை வீடுகளில் தங்குவோர் விபரங்களை காவல்துறை மூலமாக சேகரிக்க படிவங்கள் வழங்கப்படுகின்றன. நம் நகரில், நம் நகரைச் சாராதவர்கள், வாடகை அடிப்படையில் குடியமர்வது அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. இவர்களுள் பெருவாரியானவர்கள் கண்ணியமானவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. இருப்பினும் - நாம் வாழும் கால சூழலைக் கருத்திற்கொண்டு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சென்னை, புது டில்லி காவல்துறையினர் பயன்படுத்தும் படிவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி படிவம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
இப்படிவங்களை - உங்கள் பகுதியில் வாடகைக்கு வீடு கொடுக்கும் உரிமையாளர்களிடம் வழங்கி, அவர்களை - தாங்கள் வாடகைக்கு அமர்த்தி இருக்கும் - நபர்களிடம் நிரப்பிடக் கோர, தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை - தங்கள் ஜமாஅத் / ஊர் நல கமிட்டி பொறுப்பில் வைத்துக்கொண்டு, அவசியம் எனில் காவல்துறை உதவியுடன், அவற்றை ஆய்வு செய்ய தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|