இஸ்லாமிய வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்து, பல மொழிகளில் அவை திரைப்படங்களாக வடிவமைக்கப்பட்டு, மக்கள் மனதில் இலகுவாக அச்சரித்திரங்களைப் பதிய வைக்கும் முயற்சிகள் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.
நபிகள் நாயகத்தின் வரலாற்றைச் சித்தரிக்கும் “தி மெஸேஜ்”, லிபிய விடுதலைக்காகப் பாடுபட்ட உமர் முக்தார் அவர்களின் போர் வரலாறு உள்ளிட்டவை அவற்றில் அடக்கம். அந்த வரிசையில், இஸ்லாமின் இரண்டாம் கலீஃபா ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹூ அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அதன் தமிழ் வடிவம் தற்போது வெளியாகியுள்ளது.
இஸ்லாம் தொடர்பான - பல மொழிகளிலான திரை வடிவங்களையும், இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் உடைய - ஆங்கிலத்திலான பல்வேறு நிகழ்ச்சிகளையும் தமிழில் வடிவமைத்து வெளியிடுவதைத் தொழிலாகச் செய்து வரும் - Mass Communication நிறுவனத்தின் உரிமையாளர் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முஹம்மத் தம்பி, இத்திரைப்படத்தையும் தமிழ் வடிவத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி, அண்மையில் - காயல்பட்டினம் துஃபைல் வணிக வளாகத்திலுள்ள ஹனியா சிற்றரங்கில் - ஆண்கள், பெண்களுக்கென இரு நாட்களாகத் திரையிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் நகர மக்களும், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்தோரும் ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில், இப்படத்தின் மிகப்பெரிய திரையிடல் நிகழ்ச்சி, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 30, 31 ஆகிய நாட்களிலும், 2017 ஜனவரி மாதம் 01ஆம் நாளிலும் (வெள்ளி, சனி, ஞாயிறு), காயல்பட்டினம் குட்டியா பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது. பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
படங்கள்:
M.N.அஹ்மத் ஸாஹிப் |