AMN நிறுவனம் - SET TOP BOX வழங்க நகரில் 1200 ரூபாய் வசூல் செய்கிறது. இக்கட்டணம் எதற்காக வாங்கப்படுகிறது, SET TOP BOX வாங்குவது கட்டாயமா போன்ற கேள்விகளுக்கு விளக்கம் வழங்கும் வகையில் நடப்பது என்ன? குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளாக - ஒவ்வொரு பகுதியிலும், வெவ்வேறு கேபிள் ஆபரேட்டர்கள் தொலைக்காட்சி சேவைகள் வழங்கி வந்தனர். அரசு கேபிள் (TACTV) என்ற நிறுவனத்தை தமிழக அரசு துவக்கிய பின்பு, அந்த நிறுவனத்தின் (TACTV) கீழ் - அனைத்து கேபிள் நிறுவனங்களும் தங்களை பதிவு செய்துக்கொண்டனர். அவ்வாறு பதிவு செய்துக்கொண்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் - மாதத்திற்கு கட்டணமாக, ரூபாய் 70 மட்டுமே வசூல் செய்யவேண்டும். ஆனால் அதற்கும் மேலேயே அவர்கள் பல ஆண்டுகளாக வசூல் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களின் கீழ் (உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள்) - எத்தனை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள், வாடிக்கையாளர்கள் பட்டியலை அரசிடம் அந்த நிறுவனங்கள் தெரிவிக்கிறதா போன்ற கேள்விகள் இன்றும் உள்ளன. இது தனி பிரச்சனையாகும்.
சில மாதங்களுக்கு முன்பு - சில உள்ளூர் கேபிள் நிறுவனங்களை - தினத்தந்தி நாளிதழ் குழுமத்தை சார்ந்த Air Media Network (AMN) என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. அந்த நிறுவனமும் (AMN) - அரசு கேபிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த நிறுவனம் என தூத்துக்குடியில் உள்ள கேபிள் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். AMN நிறுவனமும் மாத சந்தாவாக, அரசு நிர்ணயித்துள்ள தொகையான 70 ரூபாய்க்கும் கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்கிறார்கள் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். வாங்கப்படும் தொகை விபரம் ரசீதுகளில் குறிப்பிடப்படுவதேயில்லை.
இது ஒரு புறம் இருக்க - கடந்த சில மாதங்களாக, நகரின் சில பகுதிகளில் - SET TOP BOX வாங்க, AMN நிறுவனத்தின் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களை கூறிவருகிறார்கள். SET TOP BOX க்கான கட்டணம் 1200 ரூபாய் என்று அவர்கள் வசூல் செய்வதாக நம் குழுமத்தின் அங்கத்தினர் சிலர் தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த தொகையை வசூல் செய்ய வரும் நபர், இந்த கட்டணத்தை நீங்கள் டிசம்பர் 31 க்குள் (நிறைவடைந்த ஆண்டு) தரவில்லையென்றால், உங்களுக்கு எந்த சேனலும் வராது என்றும், இதன் பிறகு நீங்கள் 1200 க்கும் கூடுதலாக பணம் செலுத்தியே SET TOP BOX வாங்க வேண்டியிருக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதனால் அச்சம் கொண்ட சிலர், உடனடியாக 1200 ரூபாய் செலுத்தி SET TOP BOX பெற்றுள்ளனர். மேலும் AMN நிறுவனத்தினர், வாடிக்கையாளர்கள் மாத சந்தா - மார்ச் வரை செலுத்த வேண்டியது இல்லையென்றும், அதன் பிறகு மாத தொகை செலுத்தலாம் என்றும் கூறியதாக தெரிகிறது.
இவ்விஷயத்தில் பொது மக்களிடம் இரு கேள்விகள் எழுந்துள்ளன.
(1) SET TOP BOX கண்டிப்பாக வாங்க வேண்டுமா?
(2) 1200 ரூபாய் வசூல் செய்யப்படுவது சரியா?
மத்திய அரசு - 4 மெட்ரோ நகரங்கள், பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்கள் என நான்கு கட்டமாக - நாடு முழுவதும், SET TOP BOX நிறுவப்படுவதை கட்டாயப்படுத்தி வருகிறது. மூன்றாவது கட்டத்தில் உள்ள நகரங்களில் SET TOP BOX தற்போது நிறுவப்பட்டு வருகிறது. இதில் காயல்பட்டினமும் அடங்கும்.
PAY CHANNEL எனப்படும் கட்டணம் சேனல்கள் பார்க்க மட்டுமே SET TOP BOX அவசியம். இலவச சேனல்கள் (FREE TO AIR Channels) பார்த்தால் போதுமானது என்று விரும்புபவர்கள், எக்காலத்திலும் SET TOP BOX வாங்க தேவையில்லை.
இந்த SET TOP BOX பெற்றிட - கால அவகாசத்தை, மத்திய அரசு நீட்டித்து வந்துள்ளது. அந்த அடிப்படையில், டிசம்பர் 31, 2016 என்றிருந்த காலக்கெடு, தற்போது மார்ச் 31, 2017 என நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த SET TOP BOX வழங்கும் நிறுவனங்கள், TRAI என்ற மத்திய அரசு நிறுவனத்திடம் DIGITAL உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு - தமிழகத்தில் DIGITAL உரிமத்தை பல நிறுவனங்கள் பெற்றுள்ளன. அதில் ஒரு நிறுவனம் தான் AMN. தமிழக அரசின் அரசு கேபிள் நிறுவனம் - இந்த உரிமம் பெற விண்ணப்பம் செய்து, அதன் விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.
எனவே - Pay Channels (கட்டண சேனல்கள்) பார்க்க SET TOP BOX வாங்குவது, தற்போதைய நிலவரப்படி அவசியம். ஆனால் - அதற்கான கால அவகாசம், இன்றைய நிலவரப்படி - மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட்டிக்கப்படலாம்.
இன்றைய தேதியில், AMN நிறுவனம் தான் நம் பகுதியில் DIGITAL சேவையை துவக்கியுள்ளது என்பது உண்மை. இருப்பினும் - வருங்காலங்களில், அரசு கேபிள் நிறுவனமும் DIGITAL உரிமம் பெறலாம்; பிற நிறுவனங்களும் தங்கள் சேவையை இங்கு துவக்கலாம். எனவே - AMN நிறுவனம் மூலம் தான் SET TOP BOX இணைப்பு வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இது தான் - பொது மக்கள் மத்தியில் நிலவும் - முதல் கேள்விக்கான பதில்.
SET TOP BOX வகைக்காக 1200 ரூபாய் வசூல் செய்யப்படுவது குறித்து - நடப்பது என்ன? குழுமம் - AMN அலுவலகத்தில் விசாரித்தது. SET TOP BOX க்கான கட்டணம் என பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இது குறித்த தெளிவான பதில் AMN நிறுவனம் தரப்பில் இல்லை. முறையான ரசீதும் பொது மக்களிடம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.
நடப்பது என்ன? குழுமம் தொடர்புக்கொண்ட AMN அதிகாரி - 1200 ரூபாய் என்பது INSTALLATION கட்டணம் என கூறினார். மேலும் - SET TOP BOX, AMN நிறுவனத்துடையது என்றும் கூறினார்.
அப்படி என்றால்,
++++ SET TOP BOX க்கு என தனியாக வாடகை பின்னர் வசூல் செய்யப்படுமா?
++++ இந்த SET TOP BOX க்கான வாரன்டி காலம் என்ன?
++++ அது ஒரு சில மாதங்களில் ரிப்பேர் ஆகிவிட்டால், AMN நிறுவனம் கட்டணம் இல்லாமல் - வேறு SET TOP BOX வழங்குமா?
++++ TRAI நிறுவனம் கூறியுள்ளபடி மாத வாடகை அடிப்படையில் ஏன் SET TOP BOX வழங்கப்படவில்லை?
++++ சந்தையில் தாமாகவே பொது மக்கள், SET TOP BOX வாங்க கூடாதா?
இது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இல்லை.
மேலும் - மார்ச் மாதத்திற்கு பிறகு, பொது மக்கள் - மாத தொகையாக, எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்ற விபரமும் - பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே - எற்கனவே, 1200 ரூபாய் செலுத்தி SET TOP BOX பெற்றவர்கள், அதற்கான முறையான ரசீதை பெற அறிவுறுத்தபப்டுகிறார்கள். மேலும் - மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளையும், தங்களிடம் பணம் வசூல் செய்தவர்களிடம் கேட்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது வரை 1200 ரூபாய் செலுத்தாதவர்கள், இக்கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும் வரை, 1200 ரூபாய் செலுத்தவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|