காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், நகர பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்லும் அரசுப் பேருந்துகளை அடையாளம் காண்பதற்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் - 24 மணி நேர சமூகக் கண்காணிப்பு (Community Monitoring), 04.01.2017. புதன்கிழமையன்று நடைபெற்றது.
அன்று காலை 08.30 மணிக்குத் துவங்கி, மதியம் - மாலை - இரவு - நள்ளிரவு – மறுநாள் (05.01.2017. வியாழக்கிழமை) அதிகாலையில் தொடர்ந்து, அன்று காலை 09.00 மணிக்கு கண்காணிப்புப் பணி நிறைவுற்றது.
இந்த 24 மணி நேர சமூகக் கண்காணிப்பின்போது, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள், ஆலோசகர்கள், அங்கத்தினர், சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் என திரளானோர் - சுழற்சி முறையில் கடமையுணர்வுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பின்போது, பேருந்து சார்ந்த மண்டலத்தின் பெயர், தடம் எண், பேருந்தின் புறப்பாடு / சேருமிடம் ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்படி, காயல்பட்டினத்திற்குள் வந்து செல்ல வேண்டிய சுமார் 500 அரசுப் பேருந்துகளுள், பேருந்து நிலையத்திற்கு உள்ளும், வெளியிலும் என பின்வருமாறு 327 பேருந்துகள் வந்து சென்றுள்ளன:-
ஆர்வமிருந்தும், கண்காணிப்பில் ஈடுபட இயலாத நிலை ஏற்பட்டதாகக் கூறிய பொதுமக்கள் பலர், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்களுக்கு தம் சார்பில் தேனீர் / சிற்றுண்டிகளை வாங்கி வந்து வழங்கினர்.
கண்காணிப்பின்போது, பேருந்து ஓட்டுநர் / நடத்துநர்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இக்கண்காணிப்புப் பணியை வரவேற்ற பெரும்பாலான பேருந்துகளின் - ஓட்டுநர் / நடத்துநர்கள் கூறியதாவது:-
“காயல்பட்டினத்துடன் எங்களுக்கு எந்தப் பிறவிப் பகையும் இல்லை... குறித்த நேரத்தில் பேருந்தை சேருமிடத்தில் கொண்டு சேர்க்காவிட்டால், உயரதிகாரிகளின் கேள்விகளுக்கு நாங்கள் விளக்கமளிக்க வேண்டியதுள்ளது. இந்தச் சிரமத்தைத் தவிர்க்கவே பெரும்பாலான ஓட்டுநர்கள் உங்கள் ஊரைப் புறக்கணித்துச் செல்லும் நிலை உள்ளது.
சீரான பேருந்து போக்குவரத்திற்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருவழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யாமலும், கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்லாமலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பளித்தால், இந்தக் கண்காணிப்புப் பணிக்கு அவசியமே இருக்காது...”
இவ்வாறு அவர்கள் கூறிச் சென்றனர்.
இதனையடுத்து, 06.01.2017. வெள்ளிக்கிழமையன்று மாலையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களைக் கொண்டு, பேருந்து போக்குவரத்துள்ள முதன்மைச் சாலை (மெயின் ரோடு), எல்.கே.லெப்பைத் தம்பி சாலை, கூலக்கடை பஜார், தைக்கா பஜார், எல்.எஃப். வீதி ஆகிய சாலைகளில், வாகன நிறுத்த ஒழுங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
பேருந்து ஓட்டுநர்கள் / நடத்துநர்கள் சுட்டிக்காட்டிய குறைகளை எடுத்துக் கூறி, முறையான வாகன நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு, முறையான வாகன நிறுத்தம் குறித்து ஏற்கனவே “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டது. அவற்றை, கடை உரிமையாளர்கள் பலர் தமது கடைகளின் முன்பு பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டி வைத்துள்ளனர்.
இதன்போது, முறையற்று வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியிருந்த பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்) |