தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யப்படும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடி வரும் தமிழக மக்கள் போராட்டத்தைக் கைவிடுமாறும், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு எவ்வித இடையூறும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாகும். 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் ஒட்டு மொத்த தடை விதித்து தீர்ப்பளித்த பின்னர், அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட ஏதுவாக, சட்ட திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை புரட்சித்தலைவி அம்மா அவர்களும், தமிழக அரசும் தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவிக்கை ஒன்றை 07.01.2016 அன்று வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தன. இந்த அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையினை விதித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டு, தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்திட ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
இது தொடர்பாக மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேற்று (19.01.2017) அவரது இல்லத்தில் சந்தித்து, மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.
எனது கருத்துகளை பரிவுடன் கேட்டுக்கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார்கள்.
மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று புது டெல்லியிலேயே தங்கி, ஜல்லிக்கட்டு நடத்திட வழி செய்யும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் விவாதித்தேன். அதன் அடிப்படையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தினை, ஒரு அவசரச் சட்டமாக பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்த வரைவு அவசரச் சட்டம் மத்திய அரசின் உள் துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையுடன், மேதகு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவேண்டும். மேதகு இந்திய குடியரசுத் தலைவர் இதில் உத்தரவு பிறப்பித்து, அதன் அடிப்படையில் மாநில ஆளுநர் அவசரச்சட்டம் பிறப்பிக்க இயலும்.
இத்தகைய வரைவு அவசரச் சட்டம், நேற்றே புது டெல்லியில் இருந்தபடியே தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, இன்று காலை தமிழக அரசு அதிகாரிகளின் மூலம் அனுப்பிவைத்துள்ளேன். மத்திய அரசில் இதற்கான தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளை பணித்துள்ளேன். மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவு மற்றும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, இந்த அவசரச் சட்டம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் பிறப்பிக்கப்படும். மாண்புமிகு பாரதப் பிரதமர் உறுதியளித்தபடி, அதற்கான முழு ஒத்துழைப்பு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும்.
எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஓரிரு தினங்களில் நடைபெற உள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்கள், மாணாக்கர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தங்களது போராட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
|