மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் மன நெருக்கடியை விளக்கும் வகையில், “மீண்டும் வருகிறேன்” எனும் தலைப்பிலான திரைப்படம், எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், 18.01.2017. அன்று திரையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
ஏக இறைவனின் திருப்பெயரால்....
“மீண்டும் வருகின்றேன்“ மாணவர் படம் திரையிடப்பட்டது
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு இன் 15 ஆம் நிகழ்வு செய்தி
`````````````````````````````````````````````````````````````
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும், அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் கடந்த 18 / 01 / 2017 புதன் கிழமையன்று மதியம் 2:45 – மாலை 4:40 மணி வரை நமதூரின் முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எழுத்து மேடை மையம் தமிழ்நாடு இன் 15 ஆம் நிகழ்வாக “ மீண்டும் வருகின்றேன் “ ( 93 நிமிடங்கள் ) என்ற சிறார்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டது.
மீண்டும் வருகிறேன்
இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதாய நோக்கமற்ற நிறுவனமான குழந்தைகள் திரைப்படக்கழகமானது ‘(.www.cfsindia.org) ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சிறப்பான திரைப்படங்களை உருவாக்கி வினியோகித்து வருகின்றது.
இதன் உருவாக்கத்தில் இயக்குனர் சிவனின் இயக்கத்தில் மலையாளத்தில் 1991 ஆம் ஆண்டு “ அபயம் “ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுகு, ஹிந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கதைச்சுருக்கம் :
வினு ஒரு கலை ஆர்வலன். அவன் இயல்பாகவே இயற்கையை மிகவும் விரும்புபவன். அன்பே உருவான தன் தாத்தா வாழும் கிராமம் பற்றிய நினைவுகளில் இதங்காணுபவன். கடுமையாக படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்கும்படி அவனது அம்மா நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கிறாள்.
தனது அன்றாட வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பதில் அவனுக்கு எப்போதுமே போராட்டம்தான். இதனால் அவன் தன்னை கடிகாரத்தின் கைதியாகவே காண்கிறான்.
தொடரும் இந்த அழுத்தங்களின் விளைவாக பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் அவன் தன் தாத்தாவின் கிராமத்திற்கு ஓடிப்போகின்றான்.
அந்த பயணத்தில் புதிய மனிதர்களை சந்திக்கின்றான். பெரியவர்களின் உலகமானது இயற்கையுடன் முரண்படுவதை அவன் சந்திக்க நேரிடுகின்றது.
பொதுவாகவே குழந்தைகளின் விருப்ப ஆற்றலுக்கெதிராக ஒவ்வாத அழுத்தங்களை பெற்றோர் கொடுக்கின்றனர்.
குழந்தைகளின் இயல்பான குணாம்சங்களுக்கு மாற்றமாக எதையாவது செய்யச் சொல்லி அழுத்துவதை விட அவர்களுக்குள் இயல்பாகவே பொதிந்திருக்கும் திறன்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இந்த படம் சொல்ல விரும்பும் எளிய செய்தி.
இந்த படத்திற்கு கீழ்க்கண்ட உள் நாட்டு , பன்னாட்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன.
Silver Elephant and Special International Jury & CIFEJ Jury Awards – 7th International Children’s Film Festival – India – 1991
Environment and Quality of Life Awards – Film Festival Ragazzi – Switzerland
Special Mention Award to Director – 1st Uruguay Children Film Festival – Uruguay – 1992
Best Children’s Film – 39th National Film festival – India – 1992
இயக்குனர் சிவன்
கேரளத்தைச் சேர்ந்த இயக்குனர் சிவன் ஒளிப்பட செய்தியாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் 1953 ஆம் ஆண்டு ‘Labour Week’ என்ற படத்தை எடுத்தார். இது இந்தியாவின் முதல் 16 மி.மீ குறும்படமாகும்.
இவரின் முதல் கலைப் படம் “ ஸ்வப்னம் “. இப்படம் கேரள மாநிலத்தின் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. இவர் ஏராளமான ஆவணப்படங்களையும் கலைப்படங்களையும் எடுத்துள்ளார்.
```````````````````````````````````````````````````````````````````````````````````
“ மீண்டும் வருகின்றேன் “திரையிடல் நிகழ்வில் 06,07,08, 09 ஆம் வகுப்பு மாணவியர் ஏறத்தாழ 50 பேர் வரை கலந்துகொண்டனர்.
இந்த படம் குறித்து மாணவியர் தெரிவித்த கருத்துக்களில் ஒன்றிரண்டு:
--- அழகான கதை. எனக்கு ரொம்ப பிடிச்சது. எப்பொழுதும் படிப்புனு இல்லாம அன்பும் கண்டிப்பா வேணும் என்பதை நான் இந்தக் கதை மூலம் தெரிந்து கொண்டேன்.
```` தாத்தாவிற்கும் பேரனுக்குமிடையே உள்ள அன்பைப் பற்றி சொல்லும் அருமையான கதை. படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு மனிதருக்கும் அன்பே தேவைப்படுகின்றது .
----------------------------------------------------------------------------------------
இந்த நிகழ்விற்கு முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் ஷம்ஸுத்தீன், இயக்குனர் ரத்தின சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: +91 91713 24824
|