தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஓரம்சம் - வீரியமிக்க நாட்டுக் காளையை இளைஞர்கள் சேர்ந்து அடக்கும் ஜல்லிக்கட்டு ஆகும். தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு, நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
இத்தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் காயல்பட்டினத்திலும் கடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
18.01.2017. புதன்கிழமையன்று சிலரால் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் இரத்தினபுரியிலும், பேருந்து நிலையம் அருகிலும் - நகரின் அனைத்துப் பகுதி மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கும் போராட்டம், 19.01.2017. வியாழக்கிழமையன்று 17.00 மணிக்கு முறைப்படி துவங்கியது.
அன்று முழுக்க - ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.
20.01.2017. வெள்ளிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க, நகரில் முழு கடையடைப்பும் நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகிலுள்ள போராட்டப் பந்தலில், அன்றிரவு முழுக்க மேள வாத்தியங்களுடன் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும் நடைபெற்றது.
21.01.2017. சனிக்கிழமையன்று (நேற்று) தொடர் முழக்கப் போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றது. நேற்று மாலையில் - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உட்பட, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் திரளான பங்கேற்பில், மனித சங்கிலி போராட்டம் 17.30 மணிக்குத் துவங்கி 18.15 மணி வரை நடைபெற்றது.
மனித சங்கிலி போராட்டத்தைக் கண்ணுற்று - பேருந்து நிலையத்தைக் கடந்து சென்ற சுற்றுலா வாகனத்திலிருந்து திடீரென இறங்கிய வெளியூர்களைச் சேர்ந்த ஆண் - பெண் பயணியரும் சுமார் 30 நிமிடங்கள் மனித சங்கிலியில் இணைந்து நின்று, தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
“ஜல்லிக்கட்டு ஆதரவாக என்றும் நிற்போம்... அதைத் தடுக்க நினைக்கும் PETA அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்போம்...
விவசாயிகளின் நன்மைக்காக எல்லா நிலையிலும் பாடுபடுவோம்... அவர்களின் சோதனைகளின்போது இன்றளவு தோள் கொடுப்போம்... அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்து நிற்போம்...
பெப்ஸி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை அறவே தவிர்ப்போம்...
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த - ஒரு குடிமகனாக எங்களால் இன்றதைச் செய்வோம்...
சிறு வணிகர்களுக்கு முழு ஆதரவளிப்போம்...
பெரு வணிகர்கள், பண முதலைகளுக்கு ஆதரவாக - பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்த்து நிற்போம்...
காய்கறிகள், பழங்களைப் பயிரிடுதல் போன்ற விவசாய நடவடிக்கைகளை எங்களால் இயன்ற அளவுக்கு எங்கள் தோட்டங்களிலும், வீடுகளின் மாடியிலும் செய்வோம்...”
என, மனித சங்கிலியின் நிறைவிலும், பின்னர் போராட்டப் பந்தலிலும் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வீட்டு விவசாயம் செய்ய விருப்பமுள்ளோருக்கு, தேவையான – வேதிப்பொருள் கலப்பில்லாத விதைகள் வழங்கப்படும் என நிறைவில் அறிவிக்கப்பட்டது.
22.00 மணியளவில், தமிழரின் பாரம்பரிய விளையாட்டான உரி அடித்தல் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
|