தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஓரம்சம் - வீரியமிக்க நாட்டுக் காளையை இளைஞர்கள் சேர்ந்து அடக்கும் ஜல்லிக்கட்டு ஆகும். தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு, நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
இத்தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் காயல்பட்டினத்திலும் கடந்த மூன்று நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
18.01.2017. புதன்கிழமையன்று சிலரால் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் இரத்தினபுரியிலும், பேருந்து நிலையம் அருகிலும் - நகரின் அனைத்துப் பகுதி மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கும் போராட்டம், 19.01.2017. வியாழக்கிழமையன்று 17.00 மணிக்கு முறைப்படி துவங்கியது.
அன்று முழுக்க - ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.
20.01.2017. வெள்ளிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க, நகரில் முழு கடையடைப்பும் நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகிலுள்ள போராட்டப் பந்தலில், அன்றிரவு முழுக்க மேள வாத்தியங்களுடன் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும் நடைபெற்றது.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த - இனம் காணப்படாத பல சிலம்பாட்ட வீரர்கள் தமக்குள் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தி, பொதுமக்களின் புருவங்களை உயரச் செய்தனர்.
இன்று, தொடர் முழக்கப் போராட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்களும், இளைஞர்களும் நூற்றுக் கணக்கில் பந்தலில் முகாமிட்டிருக்க, பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் பொதுமக்கள் பலர் போராட்டப் பந்தலில் சிறிது நேரமேனும் அமர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பலர், பந்தலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்குத் தேவையான உணவு, பழங்கள், சிறுகடி, தேனீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வழங்கி ஆதரவளித்து வருகின்றனர்.
|