தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஓரம்சம் - வீரியமிக்க நாட்டுக் காளையை இளைஞர்கள் சேர்ந்து அடக்கும் ஜல்லிக்கட்டு ஆகும். தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு, நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
இத்தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் காயல்பட்டினத்திலும் கடந்த ஐந்து நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வந்தது.
18.01.2017. புதன்கிழமையன்று சிலரால் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் இரத்தினபுரியிலும், பேருந்து நிலையம் அருகிலும் - நகரின் அனைத்துப் பகுதி மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கும் போராட்டம், 19.01.2017. வியாழக்கிழமையன்று 17.00 மணிக்கு முறைப்படி துவங்கியது.
அன்று முழுக்க - ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.
20.01.2017. வெள்ளிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க, நகரில் முழு கடையடைப்பும் நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகிலுள்ள போராட்டப் பந்தலில், அன்றிரவு முழுக்க மேள வாத்தியங்களுடன் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும் நடைபெற்றது.
21.01.2017. சனிக்கிழமையன்று (நேற்று) தொடர் முழக்கப் போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றது. நேற்று மாலையில் - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உட்பட, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் திரளான பங்கேற்பில், மனித சங்கிலி போராட்டம் 17.30 மணிக்குத் துவங்கி 18.15 மணி வரை நடைபெற்றது.
மனித சங்கிலி போராட்டத்தைக் கண்ணுற்று - பேருந்து நிலையத்தைக் கடந்து சென்ற சுற்றுலா வாகனத்திலிருந்து திடீரென இறங்கிய வெளியூர்களைச் சேர்ந்த ஆண் - பெண் பயணியரும் சுமார் 30 நிமிடங்கள் மனித சங்கிலியில் இணைந்து நின்று, தமது ஆதரவைத் தெரிவித்தனர். அன்று 22.00 மணியளவில் – தமிழரின் பாரம்பரிய விளையாட்டான உரி அடித்தல் நடைபெற்றது.
22.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களும், இளைஞர்களும் கருப்பு நிற உடையணிந்தும், கண்களில் கருப்புத் துணி கட்டியும், ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்புக்கு இந்தியாவில் தடை கோரியும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
இவ்வாறிருக்க, இன்று 09.00 மணியளவில், போராட்டப் பந்தலுக்கு வந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் சுந்தரநேசன், போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறும், பந்தலை அகற்றுமாறும் போராட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்து, பந்தலையும் அகற்றினர்.
போராட்டத்தின் துவக்கம் முதல் இன்று வரை - உடன் அமர்ந்தும், பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற போராட்ட நடவடிக்கைகளில் இணைந்து நின்றும், போராட்டப் பந்தலில் முழுமையாக அமர்ந்திருந்த மாணவர்களுக்கும் - இளைஞர்களுக்கும் தேவையான உணவு, தேனீர் - சிற்றுண்டி, ஒலி - ஒளி, பந்தல் ஏற்பாடுகளைச் செய்தும், தேவையான ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியும் வந்த - காயல்பட்டினத்தின் அனைத்துப் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர்.
|