கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை 29.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தவுள்ளன. இதுகுறித்து, அவ்வமைப்புகளில் சார்பில், முகாம் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அன்பார்ந்த காயலர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
இறையருளால், எமது கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் ஆகியன, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புடன் இணைந்து, திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம், திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் மூலமாக, புற்றுநோய் பரிசோதனை புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் & புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, பின்வரும் விபரப்படி நடத்தவுள்ளன:-
அன்பானவர்களே! புற்றுநோய் இன்று காய்ச்சல், இருமல் போல் நமதூரில் பரவலாகி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக காயல் நல மன்றங்களிடம் மருத்துவ உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்களுள் பெரும்பாலானவை புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி கோரியே அமைந்துள்ளன.
இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் பெரும்பாலும், தமது உடலில் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறிவதைக் காண முடிகிறது.
சிகிச்சை என்ற பெயரில், இதற்காக செலவழிக்கும் தொகையோ பல லட்சங்கள். மற்ற நோய்களைப் போல இந்த நோய்க்காக யாரும், யாரையும் நோய் விசாரிக்கக் கூட விரும்பப்படாத அளவுக்கு மறைத்து வைக்கப்படும் நிலை. புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதால், அந்நோயாளிகள் தலை முடிகளை இழந்து, முகம் மற்றும் உடற்பாகங்கள் அலங்கோலமாக்கப்பட்டு விடுவதே இவ்வாறு மறைத்து வைப்பதற்குக் காரணம் என அறிய முடிகிறது.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர் பெரும்பாலும் சில மாதங்களிலேயே மரணிக்கும் நிலையும் நமதூரில் இன்று சர்வசாதாரணமாகி வருகிறது. இத்தனைக்கும் காரணம், நோய் முற்றிய நிலையில் அதனைக் கண்டறிவதேயாகும்.
புற்றுநோய் பெரும்பாலும் முற்றிய பிறகுதான் வெளியே அடையாளத்தைக் காண்பிக்கும். அதன்பிறகு எடுக்கப்படும் சிகிச்சை முயற்சிகளுக்கு பெருமளவில் பலனை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், பரிசோதனை மூலம் புற்றுநோயை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய இயலும். அதற்கு இந்த முகாமை நமதூரின் அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது, அவர்களின் உயிர் - உடமைகளுக்கு இறையருளால் பாதுகாப்பைத் தரும்.
“முகாமில் கலந்துகொண்டால், நமக்கு புற்றுநோய் இருப்பதாக சொல்லி விடுவார்களோ...?” என்ற சிந்தனை பெரும்பாலான மக்களிடம் இருப்பதை அறிய முடிகிறது. யாருக்கும் அந்நோய் இல்லாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக!
ஒருவேளை, பரிசோதனையில் இந்நோய் அதன் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இறையருளால் நிச்சயம் மிகக் குறைந்த செலவில், எளிய சிகிச்சை முறையிலேயே குணப்படுத்த இயலும் என மருத்துவ அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தயக்கம் காண்பிக்காமல் அனைவரும் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறும், வெளியூர், வெளிநாடுகளிலிருக்கும் காயலர்கள், தமது குடும்பத்தினருக்கு இதுகுறித்து எடுத்துக்கூறி, அவர்களையும் அவசியம் கலந்துகொள்ளச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்களுக்கு, பெண் மருத்துவ நிபுணரைக் கொண்டு பிரத்தியேகமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முகாமில் யாருக்கேனும் புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அது இந்த முகாம் ஏற்பாட்டாளர்களுக்குக் கூட தெரிவிக்கப்படாமல், மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.
இம்முகாமில் கலந்துகொள்ள, முற்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே பயனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளதால், விண்ணப்பிக்காதோருக்கு முகாமில் கலந்துகொள்ள வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அறிக.
எல்லாம்வல்ல அல்லாஹ், நமதூரை எந்தவித கொடிய நோய்களும் அண்டாத நகரமாகவும், நம் மக்கள் தாங்க முடியாத சோதனைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாகவும் ஆக்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.M.L.முஹம்மத் லெப்பை
|