இரண்டாம் பைப்லைன் திட்டத்தின் கீழ், வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் நாள் முதல் - நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படும் என, காயல்பட்டினம் நகராட்சியில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
இந்தியாவின் 68ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று காலை 09.30 மணிக்கு குடியரசு நாள் விழா நடைபெற்றது.
கொடியேற்றம்:
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையரும் (பொறுப்பு) - தனி அலுவலருமான நா.அறிவுச் செல்வன் தேசிய கொடியேற்றி, சிறப்புரையாற்றினார். அவரது உரையின் உள்ளடக்கம்:-
>>> அடுத்த 10 நாட்களுக்குள் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய தார் சாலை போட்டு முடிக்கப்படும். அதற்கான பணியாணை வழங்கப்பட்டுவிட்டது...
>>> நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்...
>>> நகரில் 43 சாலைகளைப் புதிதாகப் போடுவதற்காக, அதன் மீதான தடையாணையை நீக்கிப் பெற முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்...
>>> காயல்பட்டினம் நகராட்சியில், 02, 03, 04, 05, 06, 09, 10, 11, 12, 14, 16, 17, 18 ஆகிய 13 வார்டுகள் - திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத வார்டுகளாக நகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதர பகுதிகளிலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் தவிர்க்கப்பட்டு, அனைவருக்கும் தனிக் கழிப்பறை அமைத்துக்கொடுப்பதற்கு ஆவன செய்யப்பட்டு, முழு நகராட்சியையும் - திறந்தவெளி கழிப்பிடம் இல்லா நகராட்சியாக அறிவிக்கப்படும்... இதுவரை 310 குடும்பத்தினருக்கு தனி கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது... சில இடங்களில் பொது கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் அப்பணி நிலுவையில் உள்ளது.
>>> நகரில், தனியார் நிலங்களில் வளர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை அந்தந்த நிலங்களில் உரிமையாளர்கள் வேருடன் பிடுங்கி அகற்றி ஒத்துழைக்க வேண்டும்...
>>> பலமுறை எச்சரித்தும், நகரில் ப்ளாஸ்டிக் பைகளின் பயன்பாடு இன்றளவும் குறையாத நிலையிலேயே உள்ளது... இன்று குடியரசு நாளைத் தொடர்ந்து, இனி அடிக்கடி கடைகளில் சோதனை செய்யப்பட்டு, ப்ளாஸ்டிக் பயன்பாட்டை அவர்கள் நிரந்தரமாகத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்...
>>> ப்ளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடை உரிமையாளர்கள் வரும் மார்ச் மாதம் முதல் தம் கடை உரிமத்தைப் புதுப்பிக்க வருகையில், மாதமொன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்று உரிமம் வழங்கப்படும்... ஒன்று அவர்கள் ப்ளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்குவதில்லை என முடிவுக்கு வர வேண்டும். அல்லது இவ்வளவு பெரிய தொகையைக் கட்டி உரிமம் பெற ஆயத்தமாக இருக்க வேண்டும். இதுகுறித்த அரசாணையை விளக்குவதற்காக, நகரின் அனைத்து கடை உரிமையாளர்களையும் அழைத்து விளக்கக் கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளது... ப்ளாஸ்டிக் பைகளை வினியோகிப்பதில்லை என கடை உரிமையாளர்களும், பயன்படுத்தப் போவதில்லை என பொதுமக்களும் தீர்மானித்துவிட்டால், இதுபோன்ற சட்டங்களுக்கு அவசியமே இருக்காது.
>>> காயல்பட்டினம் எல்.ஆர்.நகர், கடையக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் கடை வைத்திருப்போர், தம் கடைகளில் ப்ளாஸ்டிக் பைகள் வழங்கப்படாது என்று அறிவித்திருப்பதும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைத் துணிப் பை கொண்டு வரத் தூண்டுவதும், அவ்வாறு கொண்டு வருவோரை ஊக்கப்படுத்த இனிப்புகளை வழங்கி வருவதும் பாராட்டத்தக்கது...
>>> நகரில் ப்ளாஸ்டிக் குப்பைகளை மட்டும் வாரம் ஒருமுறை வந்து சேகரிக்கப்படும்...
>>> இரண்டாவது பைப்லைன் திட்டப் பணிகள் 90 சதவிகிதம் பூர்த்தியாகிவிட்டன. வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் நாளன்று, இத்திட்டத்தின் கீழ் நகருக்குக் குடிநீர் பெறப்படும். ஒரு சில தெருக்களில் நிலுவையிலுள்ள குழாய் பதிப்புப் பணிகள் நிறைவுற்றதும், புதிய குழாய்கள் வழியாக இரண்டாவது பைப்லைன் திட்டத்தில் பெறப்படும் குடிநீர் வினியோகிக்கப்படும்...
>>> நகராட்சியில் தற்போது துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் முதல் கூடுதல் பணியாளர்கள் சேர்க்கப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதார ஆய்வாளர் உரை:
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய - நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தொடர்ந்து பேசினார்.
காயல்பட்டினத்திற்கு வர வேண்டிய குடிநீர் மிகவும் குறைந்த அளவிலேயே வருவதால், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை முழுமையாக வினியோகிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக லாரி மூலம் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், பொதுமக்கள் தம் தேவைக்கு 4 அல்லது 5 குடங்கள் தண்ணீரை குடிநீருக்காக மட்டும் எடுத்து ஒத்துழைப்பதன் மூலம், எல்லோருக்கும் குடிநீர் முறையாகக் கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
வாழ்த்துரை:
காயல்பட்டினம் நகராட்சியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பொறியாளர் வே.பாலமுருகன், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், ஜெ.அந்தோணி, கே.ஜமால், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி, பொதுமக்கள் சார்பில் எஸ்.கே.ஸாலிஹ், நகராட்சி வருவாய் துணை அலுவலர் நவநீதகிருஷ்ணன், சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவி முத்து ஷர்மிளா உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். பின்னர், அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு விழாவின்போது புதிய சீருடை வழங்கப்பட்டது.
நகராட்சி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
வண்ணக் கோலங்கள்:
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, நகராட்சியின் பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் இணைந்து - விழா நடைபெற்ற வளாகம் முழுக்க பல வண்ணங்களில் கோலங்களை வரைந்து அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
|