“ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்தும் செய்தி என்ன?” எனும் தலைப்பில், எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில் விவாத அரங்கம் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர்கள், நகரப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஏக இறைவனின் திருப்பெயரால்....
தமிழகம் முழுக்க தன்னெழுச்சியாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெறுமனே மண்ணின் மரபைக் காக்கும் தற்காப்பு முயற்சி என சுருக்கி பார்க்க முடியாது.
களத்திலிருந்து கிடைத்த ஏராளமான தகவல்கள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு பரிமாணங்களும் கோணங்களும் உள்ளதை எடுத்துக் காட்டின. இது தொடர்பான விவாத அரங்கிற்கு எழுத்து மேடை மையம் தமிழ்நாடு செய்திருந்தது.
கடந்த 22 / 01 / 2017 ஞாயிறன்று மாலை 07:15 – 9:00 மணி வரை நமதூரின் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் உள்ள துஃபைல் வணிக வளாகத்தின் ஹனியா சிற்றரங்கில், ஜல்லிக்கட்டு போராட்டம் – உணர்த்தும் செய்தி என்ன ? என்ற தலைப்பில் விவாத அரங்கு நடைபெற்றது.
வரவேற்புரை & அறிமுக உரைக்குப் பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் 11 ஆண்டு கால வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார் எ.மேடை மையத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்..
அதைத் தொடர்ந்து பங்கேற்றோரின் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. அதன் சுருக்கமான தொகுப்பு :
---- வெறுமனே ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு குரல் என மட்டுமே தொடங்கிய இப்போராட்டமானது பின்னர் பல்வேறு முனையுடையதாக மாறியது.
----- ஏறத்தாழ 240 விவசாயிகளின் சாவு ,பருவ மழை பொய்த்தது, குடி நீர் தட்டுப்பாடு , வறட்சி , வெள்ள மேலாண்மையில் அரசின் தோல்வி, காவிரி பிரச்னையில் நடுவணரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை , முல்லப்பெரியாறு விவகாரம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம், நடுவணரசின் மறைமுக செயல் திட்டம் , மாநிலங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத உச்ச நீதி மன்றம், கூட்டாட்சி முறையில் பேணப்பட வேண்டிய மாநிலங்களின் உரிமைகளை நடுவணரசு பொருட்படுத்தாமை, நாட்டின் பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டி ஒரு நாடு ஒரு மக்கள் ஒரு மொழி ஒரு பண்பாடு என கட்டியெழுப்ப முயலும் ஹிந்துத்வ ஃபாஸிஸ வலது சாரி சக்திகளின் பல்முனை முயற்சி, உள் நாட்டு காளை இனங்களை ஒழித்துக் கட்டி மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஜெர்சி இன மாடுகளை நிலை நிறுத்துதல், செல்லாக்காசு விவகாரம் என பல்வேறு குரல்கள் களத்தில் ஒலிக்கின்றன. மேற்கண்ட காரணிகளினால் வெறுப்புற்றிருந்த இளைய தமிழ் மனதின் உணர்ச்சிப் பீறிடல்தான் இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம்..
``` நாடு விடுதலையடைந்த பிறகு தமிழகம் கண்ட மாபெரும் எழுச்சி ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாகும். அதன் பிறகு வருவது ஜல்லிக்கட்டுக்கான எழுச்சிதான். இரண்டு போராட்டங்களுக்கும் ஒப்பீட்டளவில் சில வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் உள்ளன.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டமானது திராவிட தமிழ் பகுத்தறிவு அரசியலின் நீட்சியாகும். இதன் பின்னணியில் தி.மு.க. இருந்தது. வன்செயல்களும் உயிர்ப்பலிகளும் நடந்தன.. ஹிந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தின் உயிர்த்தியாகிகளின் நினைவிடங்கள் இன்று சீந்துவாரின்றி கிடக்கின்றன, ஆனால் இப்போராட்டம் உருவாக்கிய கனிகளை தமிழகம் இன்றளவும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் அதிர்வானது இத்தனை காலங்கடந்தும் ரீங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
ஜல்லிக்கட்டு போராட்டமானது எந்த ஒரு அரசியல் கட்சிகளின் பின்னனியோ பணபலமோ பரந்து பட்ட திட்டமிட்ட வலைப்பின்னலோ இல்லாமல் தன்னெழுச்சியாக உருவாகியுள்ளது. வன் செயல்களில்லாமல் மிகவும் முதிர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. அலட்சியமாக இருந்த மாநில அரசை இந்த போராட்டமானது பணிய வைத்துள்ளது. அரசியல் வாதிகள் நம்பத் தகாதவர்கள் என்பதையும் அரசியல் கட்சிகளின் துணை எதுவுமில்லாமல் சாதிக்க முடியும் என்பதையும் இப்போராட்டம் நிரூபித்துள்ளது.
---- நாளையே இப்போராட்டம் பல்வேறு காரணங்களினால் முடிவிற்கு கொண்டு வரப்படலாம். ஆனால் இந்த போராட்டம் வெளிச்சம் போட்டுக்காட்டிய பல்வேறு பிரச்னைகள் தொடர்பான எண்ண ஓட்டங்களையும் போக்குகளையும் யாராலும் தடுக்க முடியாது. அவை உரிய காலத்தில் வெளி வந்தே தீரும். இப்போராட்டமானது சமூகத்தின் பல்வேறு தளங்களில் நீடித்த அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
--- ஜல்லிக்கட்டு போராட்டக்களமானது மத இன வேற்றுமைகளைக் கடந்து ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமைக்களமாகவும் விளங்குகின்றது. போராளிகளுக்கு பிரியாணிப் பொட்டல வினியோகம் , முஸ்லிம்கள் தொழும்போது சக போராளிகள் அரணாக நின்றது போன்ற செயல்பாடுகளின் வழியாக முஸ்லிம்கள் பொது பிரச்னைக்காக குரல் கொடுப்பது, பொதுப்போக்கில் தங்கள் பங்களிப்பை முஸ்லிம்கள் நல்குவது போன்றவை அதிகரித்திருப்பதை உணர முடிகின்றது.
--- சென்னை மெரினா களத்தில் பெப்சி, கோலா குப்பிகளை சாலையில் போட்டு உடைத்ததின் வழியாக அன்னிய பானங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வலையும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
``` இந்த நாடு ஒற்றைப் பண்பாடுடையதாக என்றுமே இருந்ததில்லை. எடுத்துக் காட்டாக ஹிந்து சமயத்திற்குள்ளேயே பல்வேறு கடவுளர்களை வழிபடுபவர்கள், மத, பண்பாட்டு சிறுபான்மையினர், சைவ அசைவ உணவினர், பல்வேறு திருமண மண விலக்கு சட்டங்களை உடையவர்கள் என வாழ்ந்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதியினர் தேங்காய் தும்பை பிய்த்துப் போடுவதின் வழியாக மண விலக்கைப் பெறுகின்றனர்.
விவாத நிறைவில்:
---- தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடந்து வரும் ஜல்லிக் கட்டு ஆதரவு போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத் தெரிவித்தல்
```` பொது குடிமை சட்ட எதிர்ப்பு , ஊழலுக்கெதிரான போராட்டம், தமிழகத்தில் லோக் பால் நிறுவதல், சேவைகளுக்கான உரிமைச் சட்டம் கொண்டு வருதல், மது ஒழிப்பு போன்ற விஷயங்களுக்காகவும் பொது போராட்டம் நடத்தப்பட வேண்டும்
```` காயல்பட்டினத்தில் அன்னிய குளிர்பானங்களின் விற்பனை, நுகர்வுக்கெதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
---- மரபணு பிறழ்வு கொண்ட ஜெர்சி மாட்டின் பாலுக்கு மாற்றாக நாட்டுப்பசுக்களின் பால் தரும் பண்ணை ஏற்படுத்த வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
விவாத அரங்கை எ.மேடை மைய நிர்வாகிகளான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அஹ்மத் ஸாஹிப், சாளை பஷீர் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
துஆ கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: +91 91713 24824
படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
|