தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜனவரி 31) நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்ததோடு, புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், குற்ற பின்னணி உள்ளவர்கள் போட்டியிடாத வண்ணம் பிரமாணப் பத்திரத்தை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு தாக்கல் செய்யாதவர்களின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் ராமமோகனராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.குமார் வாதிடுகையில், "தேர்தல் ஏப்ரலில் நடத்தப்படும்.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்க ஐந்து வார கால அவகாசம் தேவை. தனி நீதிபதியின் உத்தரவில் ஒரு சிலவற்றை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை அமலுக்கு கொண்டு வருவதற்கு பல கோடி ரூபாய் செலவாகும்' என்றார்.
அதைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், "தனி நீதிபதி உத்தரவு சரியான முறையில் உள்ளது. இதை பின்பற்றி தேர்தலை உடனே நடத்த வேண்டும், என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், தேர்தலை நடத்த இவ்வளவு அதிக நாள்கள் ஏன் பிடிக்கிறது என்பதை அறிய விரும்புவதாகவும், தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து செவ்வாய்க்கிழமைக்குள் (ஜனவரி 31) நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தகவல்:
தினமணி
|