காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படும் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழான பயனாளிகளின் எண்ணிக்கையை 25இலிருந்து 50ஆக உயர்த்திட, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டம், 30.12.2016. வெள்ளிக்கிழமையன்று 19.00 மணியளவில், பைத்துல்மால் கூட்டரங்கில், எஸ்.எம்.ஹஸன் மரைக்கார் தலைமையில் நடைபெற்றது.
எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் கிராஅத் ஓதினார். துவக்கமாக, ஹாங்காங்கில் அண்மையில் காலமான - அமைப்பின் துணைச் செயலாளர் மர்ஹூம் கத்தீபு ஏ.ஜெ.முஹம்மத் மீரா ஸாஹிப் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அன்னாரின் மஃக்ஃபிரத்திற்காகப் பிரார்த்திக்கப்பட்டது.
பைத்துல்மால் அறக்கட்டளையின் வளர்ச்சிப் பணிகள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) பைத்துல்மால் அறக்கட்டளை துவக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, வரும் ரமழான் மாதத்திற்குப் பின் வெள்ளி விழா கொண்டாடுவது என்றும், அவ்வமயம் வெள்ளி விழா மலர் வெளியிடவும், நலத்திட்டங்களை அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
(2) கே.எம்.டீ. மருத்துவமனையுடன் இணைந்து அறக்கட்டளையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 25 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையை 50 என உயர்த்தி, மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டது.
(3) இதுவரை பைத்துல்மால் அறக்கட்டளை வழங்கி வரும் கடன் உதவித் திட்டம் தேவையுடைய அனைவரையும் சென்றடைவதற்குத் தோதுவாக, மிகவும் எளிமைப்படுத்தி, அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் - வாய்ப்புகளை ஆராய்ந்து, (பயனாளிகள் பயனடைய முயற்சி செய்வது) நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
(4) வருங்காலங்களில் எளிமையான (ஒருங்கிணைந்த) திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்குடன், பைத்துல்மால் மூலம் அனைவரும் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த திருமணத் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறங்காவலர் பாளையம் எம்.ஏ.ஹபீப் முஹம்மத் துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இதில், டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி, வி.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, கே.எம்.ஸலீம், எஸ்.ஏ.ஜவாஹிர், எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபிஈ, எஸ்.எஸ்.எம்.முஹம்மத் மீரா ஸாஹிப், எம்.ஏ.ஜெய்னுல் குத்புத்தீன், எஸ்.எம்.அஹ்மத் சுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|