இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சருமான இ.அஹ்மத், புதுடில்லியில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.
மாரடைப்பு ஏற்பட்டவுடன் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த புதுடில்லி RML மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று 02.15 மணியளவில் அவர் காலமானார்.
தகவலறிந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் ஆகியோர் உடனடியாக அங்கு விரைந்து சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
சடலங்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் Embalming வசதி புதுடில்லி RML மருத்துவமனையில் இல்லாததால், அவரது ஜனாஸா - Embalming செய்யப்படுவதற்காக, அங்கிருந்து புதுடில்லி AIIMS மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அப்பணி நிறைவுற்றதும், உடனடியாக அங்கிருந்து - அவரது சொந்த மாநிலமான கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
1938ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாளன்று அவர் பிறந்தார்.
தனது இளங்கலை பட்டப்படிப்பை கேரள மாநிலம் தெள்ளிச்சேரியிலுள்ள அரசு ப்ரென்னென் கல்லூரியிலும், பின்னர் சட்டப்படிப்பை திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியிலும் முடித்துப் பட்டம் பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக குலாம் மஹ்மூத் பனாத்வாலா இருந்தபோது, இவர் தேசிய பொதுச் செயலாளராகவும், அவரது மறைவுக்குப் பின் அதன் தேசிய தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
1967, 1977, 1980, 1987 ஆகிய பருவங்களில் நான்கு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலத்தின் தொழிற்சாலைகள் துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1971 முதல் 1977 வரை, கேரள மாநிலத்தின் Rural Development Boardஇன் நிறுவனத் தலைவராகவும், 1979 முதல் 1980 வரை, கேரள மாநிலத்தின் சிறுதொழில் வளர்ச்சித் துறை செயல் தலைவராகவும், 1981 முதல் 1983 வரை - கேரள மாநிலம் கண்ணூர் நகர்மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய பருவங்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-2014 பருவத்திலான இந்திய நாடாளுமன்றத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்திருந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில், தொடர்வண்டித் துறை (ரயில்வே) இணையமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
2004-2009 பருவத்தில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும், 2009 ஏப்ரல் முதல் 2011 ஜனவரி வரை இந்திய ரயில்வேயின் இணையமைச்சராகவும், மீண்டும் வெளியுறவுத் துறை இணையமைச்சராக 2011 ஜனவரி 24ஆம் நாளன்றும் பொறுப்பேற்றிருந்தார். இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக ஜூலை 2011 முதல் அக்டோபர் 2012 வரை பொறுப்பு வகித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் அங்கம் வகித்த காலங்களில், வெளியுறவுத் துறை, ரயில்வே, விமானப் போக்குவரத்து & சுற்றுலா, அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் & காடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான சிறப்புக் குழுக்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்தியாவின் Government Assurance குழுவின் தலைவராகவும், இந்தியா - கத்தர் நாடுகளுக்கிடையிலான High Level Monitoring Mechanism (HLMM)இன் துணைத் தலைவராக நவம்பர் 2011இலும் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய அரசின் பிரதிநிதியாக 1991 முதல் 2014 வரை 10 முறை பங்கேற்றுள்ளார். GCC நாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்டிருந்தார்.
பலமுறை புனித ஹஜ் செய்துள்ள இவர், இந்திய அரசின் ஹஜ் நல்லிணக்கக் குழு உறுப்பினராக 5 முறை சென்றுள்ளார்.
ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் 4 நூல்களை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|