இன்று (ஜனவரி 31) முதல் தினமும், 5 லட்சம் லிட்டர் குடிநீர் நகருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வெளியுட்டுள்ள தகவல் வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த சில வாரங்களாக கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. மேல ஆத்தூரில் உள்ள TWAD நிலையத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீரின் அளவு குறைந்த காரணத்தால், டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரம் இடத்திற்கு இடம் மாறுபடுவதாகவும், டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் கணக்கு மிகைப்படுத்தி எழுதப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக, TWAD குடிநீர் மையத்தில் இருந்து இரு தினங்களுக்கு ஒரு முறை 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. (வழமையாக தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கபப்டும்.)
இது - ஜனவரி 29 அன்று 10 லட்சம் லிட்டர் என உயர்த்தப்பட்டு, இன்று (ஜனவரி 31) முதல் - தினமும் - 5 லட்சம் லிட்டர் குடிநீர் - காயல்பட்டினம் நகராட்சிக்கு - வழங்கப்படும் என மேல ஆத்தூர் TWAD நிலையத்தின் பொறியாளர், திரு பாலசுப்ரமணியம், நம்மிடம் தெரிவித்துள்ளார்.
நகரின் குடிநீர் இணைப்புகள் மொத்தம் 9000 என்ற அடிப்படையிலும், தலைக்கு தினமும் 90 லிட்டர் குடிநீர் என்ற அடிப்படையிலும், தற்போதைய தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வருகை என்ற அடிப்படையிலேயே, நகர் முழுவதும் - அனைத்து பகுதிகளுக்கும், குறைந்தது 8 தினங்களுக்கு ஒரு முறை, குழாய் மூலமே குடிநீர் வழங்க முடியும்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |