காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக நகராட்சியில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அப்பகுதி மக்களின் சார்பாக எஸ்.ஏ.கே. ஷேக் தாவூத் ("மாஷா அல்லாஹ்" தாவூத்) பெயரில் வழக்கு ஒன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் - தொடரப்பட்டது (வழக்கு எண் 221/2016[SZ]).
மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சி மற்றும் அரசு தரப்பு என ஐவர் மீது தொடரப்பட்ட இவ்வழக்கில், கடைசி விசாரணை வரை (ஜனவரி 17) எதிர்தரப்பினர் எவரும் பதில் தாக்கல் செய்யவில்லை. இச்சூழலில், இவ்வழக்கு இன்று (ஜனவரி 31) மீண்டும் - நீதிபதி எம்.எஸ்.நம்பியார் மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் - விசாரணைக்கு வந்தது.
நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வித்யலட்சுமி விபின் - எல்.எப்.சாலை மற்றும் அதன் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படவில்லை என கூறினார்.
உத்தரவை மீறி சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்வதாக மனுதாரர் - முந்தைய விசாரணையின் போது தெரிவித்ததை நினைவுக்கூர்ந்த நீதிபதி எம்.எஸ்.நம்பியார் - ஏன் அது குறித்த மனு தற்போது தாக்கல் செய்யப்படவில்லை என வினவினார். அடுத்த விசாரணையின் போது இது குறித்து விபரங்கள் தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் - பப்பரப்பள்ளி பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தெரிவித்தார். மேலும் மனுதாரர் சார்பாக தீர்ப்பாயம் வந்திருந்த ஹாஜி ராவண்ணா அபுல்ஹசன் சில வார்த்தைகள் பேச விரும்புவதாக - வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது எல்.எப்.சாலை பகுதி எங்குள்ளது, பப்பரப்பள்ளி எங்குள்ளது என ஹாஜி ராவண்ணா அபுல் ஹசன் நீதிபதியிடம் தெரிவித்தார்.
அதற்கு பதில் கூறிய நகராட்சி தரப்பு வழக்கறிஞர், இது வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தொடர்பில்லாத விஷயம் என்று கூறினார்.
நகராட்சி குப்பைகள், தற்போது எங்கு கொட்டப்படுகின்றன என நீதிபதி வினவினார். வேறு இடத்தில கொட்டப்படுகிறது என்றும், அது சம்பந்தமான வழக்கு இதுவல்ல என்றும் நகராட்சி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் குறித்த விஷயம் என்பதால், தற்போது குப்பைகள் எங்கு கொட்டப்படுகிறது என தீர்ப்பாயம் விசாரிக்கலாம் என்று கூறிய நீதிபதி, பத்து தினங்களுக்குள் - தற்போது நகராட்சி குப்பைகள் எங்கு கொட்டப்படுகிறது, முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற விபரங்களை நகராட்சி தரப்பு தாக்கல் செய்யவேண்டும் என கூறி - வழக்கினை பிப்ரவரி 23 தேதிக்கு ஒத்திவைத்தார்.
இன்றைய விசாரணையின் போது, தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) திரு அறிவுட்செல்வன் நேரில் ஆஜராகி இருந்தார்.
ஜனவரி 31, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
டிசம்பர் 13, 2016 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஜனவரி 17, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 18-2-2017; 10:00] |