பொள்ளாச்சியில் நடைபெற்ற - தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விரிவான விபரம்:-
பொள்ளாச்சி கால்பந்துக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்துப் போட்டி, 25.01.2017. முதல் 29.01.2017. வரை நடைபெற்றது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் 54 அணிகள் பங்கேற்ற நாக் அவுட் இப்போட்டியில், தென் மாவட்டங்களிலேயே காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி மட்டும் பங்கேற்றது.
முதல் சுற்றுப் போட்டியில், சென்னை கேம் டே அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது சுற்றில் மதுரை கன்னர்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், காலிறுதிக்கு முந்திய சுற்றில், உடுமலைப் பேட்டை கால்பந்து அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும் KSC அணி வென்றது.
காலிறுதியில், சேலம் அணியுடன் மோதிய போட்டியில் ஈரணிகளும் கோல் அடிக்காத்தால் சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. அதில், 4-2 என்ற கோல் கணக்கில் KSC அணி வென்றது.
அரையிறுதிப் போட்டியில், தேனி அணியுடன் மோதியதில் ஈரணிகளும் கோல் அடிக்காத நிலையில் போட்டி முடிவுறவே, சமனுடைப்பு முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் KSC அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில், கோவை நேரு கல்லூரி அணியுடன் மோதிய KSC அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சாம்பியனான காயல்பட்டினம் KSC அணிக்கு, சுழற்கேடயம், 15 ஆயிரத்து ஒரு ரூபாய் பணப்பரிசு, வெற்றிக் கோப்பை ஆகியன வழங்கப்பட்டன. KSC அணி வீர்ர் அப்துல் லத்தீஃப் - சிறந்த முன்கள ஆட்டக்காரருக்கான விருதைப் பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற காயல்பட்டினம் KSC அணிக்கு, கே.வி.செய்யித் முஹ்யித்தீன் பயிற்றுநராகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் வென்ற தனதணியைப் பாராட்டும் வகையில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில், 31.01.2017. அன்று பாராட்டு விழா, தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர், செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்து, சாதனை அணி வீர்ர்களைப் பாராட்டிப் பேசினர்.
நிறைவில், அனைத்து வீர்ர்களுக்கும் பணப்பரிசும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதோடு, சுழற்கேடயமும் - கோப்பையும் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், KSC அங்கத்தினர், வீர்ர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தகவல்:
சீஷெல்ஸ் நாட்டிலிருந்து...
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
|