பள்ளிகளுக்கிடையிலான - 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான - மாநில அளவிலான குடியரசு நாள் விழா கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி வெற்றிபெற்று, இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. விரிவான விபரம்:-
பள்ளிகளுக்கிடையிலான - 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான - தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்துப் போட்டி, தேவகோட்டை டி ப்ரிட்டோ மேனிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதிலுமிருந்து 18 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன.
முதல் போட்டியில் காஞ்சிபுரம் வெள்ளையன் செட்டியார் மேனிலைப் பள்ளி அணியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப் பள்ளி அணி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
காலிறுதிப் போட்டியில், தஞ்சாவூர் டான் பாஸ்கோ பள்ளி அணியை எதிர்த்தாடி, 2-0 என்ற கோல் கணக்கில் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று, அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில், சேலம் லிட்டில் ஃப்ளவர் மேனிலைப் பள்ளி அணியுடன் மோதி, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டி 05.02.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப் பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்ற அணியாகத் தேர்வு பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி, இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் - பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாட, இரண்டாவது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி இதுவரை 5 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, 2 முறை வெற்றியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
06.02.2017. திங்கட்கிழமையன்று பள்ளியில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலின்போது, இவ்வெற்றி குறித்த தகவல்கள் அனைத்து மாணவர்களுக்கும் பகிரப்பட்டு, பரிசுக் கோப்பைகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அத்துடன், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் இதன்போது பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்களால் பாராட்டப்பட்டனர்.
தகவல்:
HIMS
படங்கள்:
ஜமால்
(உடற்கல்வி ஆசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி)
|