கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் 157 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்ற பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசோதனை இலவச முகாமை 28.01.2017., 29.01.2017. ஆகிய இரண்டு நாட்களில் நடத்தின.
இம்முகாம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, 28.01.2017. சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, ஆயிஷா சித்தீக்கா மகளிர் அரபிக் கல்லூரி, குத்துக்கல் தெரு - ஸூஃபீ மன்ஸில் அருகிலுள்ள ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் பெண்கள் தைக்கா, ஹாஜியப்பா தைக்கா தெருவிலுள்ள நுஸ்கியார் பெண்கள் தைக்கா ஆகிய 4 இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிகிச்சை மையத்தின் மருத்துவக் குழுவினர் இந்நிகழ்ச்சிகளை நடத்தினர்.
29.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம், நமதூர் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்டது.
முகாம் துவக்க நிகழ்ச்சி, கே.எம்.டீ. மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது. ஹாங்காங்கில் நீண்ட காலமாக வணிகம் புரிந்த - வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க, கத்தர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். புற்றுநோய் பரவும் விதம், அதைத் தடுக்கும் முறை, வந்துவிட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் உரையாற்றினார்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பின்னர் பரிசோதனை முகாம் துவங்கியது.
டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் கிருஷ்ணவேனி, டாக்டர் யாமினி ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினம் மருத்துவர் டாக்டர் எம்.எம்.சுல்தான் ராஷித் துணைப்பணியாற்றினார்.
காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 57 ஆண்களும், 100 பெண்களும் என மொத்தம் 157 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
முகாமில் பங்கேற்ற ஆண்களுள் இருவருக்கும், பெண்களுள் நால்வருக்கும் புற்றுநோய்க்கான ஆரம்ப அடையாளங்கள் தென்பட்டதாகவும், எளிய சிகிச்சையில் இலகுவாக அதைச் சரிசெய்துவிடலாம் என்றும் மருத்துவக் குழுவினர் நிறைவு நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.
முகாமை இணைந்து நடத்திய கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளின் சார்பில், திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு - Amplified Portable Speaker with Wireless Mic அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், முகாமில் சேவையாற்றிய செவிலியர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நிர்வாக அலுவலர் கண்டி ஸிராஜ், கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைச் செயலாளர் எஸ்.ஹமீதுல் ஆஷிக்கீன், செயற்குழு உறுப்பினர் ஜமால், முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன், பிரதிநிதி ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், அங்கத்தினரான எம்.எல்.அம்ஜத், எம்.எஃப்.முஹம்மத் ஸாலிஹ், இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான சாளை நவாஸ், ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபழ்ல் இஸ்மாஈல், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், மலபார் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் மஸ்ஊத், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பெண்கள் பகுதியில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் பெண் தன்னார்வலர்கள் ஏற்பாட்டுப் பணிகளைச் செய்திருந்தனர். ‘முர்ஷித் ஜெராக்ஸ்’ கே.முஹ்ஸின், மன்னர் பாதுல் அஸ்ஹப், கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் துணை நின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.M.L.முஹம்மத் லெப்பை &
M.M.S.காழி அலாவுத்தீன்
|